Quantcast
Channel: ranjani narayanan
Viewing all 393 articles
Browse latest View live

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் பகுதி 5 

$
0
0

         

மருத்துவர்கள் தங்கள் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆகவேண்டும்; தாங்கள் கட்டி வைத்திருக்கும் பெரிய மருத்துவமனையை அவர்கள் நிர்வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பொறியியலாளர் தன் மகன் தன்னைப் போலவே அந்தத் துறையில் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டுமென்று விரும்புகிறார். வியாபாரி தன் மகன் தனக்குப் பின் தனது வியாபார சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்க வேண்டுமென்றே விரும்புகிறார்.

 

ஆனால் ஒரு ஆசிரியர்…. ?  ஏனோ அவரும் இவர்களைப் போலவே தன் குழந்தை மருத்துவராகவும், பொறியியலாளர் ஆகவும் ஆகவேண்டும் என்றே விரும்புகிறார். தன்னைப் போல ஆசிரியர் ஆக வேண்டும் என்று விரும்புவதில்லை. மிகவும் வருந்தத்தக்க சூழ்நிலை. யாருமே விரும்பி ஆசிரியர்கள் ஆவதில்லையோ என்று தோன்றுகிறது, இல்லையா?

 

அந்தக் காலத்தில் பெண்களுக்கென்றே ஏற்பட்டது இந்த ஆசிரியர் தொழில் என்று சொல்லுவார்கள். இந்தப் பணிக்கு பெண்களிடையே மிகப்பெரும் வரவேற்பு இருந்தது. தையல், பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்றவர்களுக்கும் இந்த ஆசிரியர் தொழில் கை கொடுத்தது. குழந்தைகளுடன் போய்விட்டு அவர்கள் வீட்டிற்கு வரும்போது திரும்பி வந்துவிடலாம்; அவர்களுக்கு விடுமுறை என்றால் அம்மாக்களுக்கும் விடுமுறை என்று பெண்களுக்கு மிகவும் உகந்த ஒரு தொழிலாக இருந்தது இந்த ஆசிரியப்பணி. இவை மட்டுமே காரணங்கள் ஆகிவிடுமா? கற்பிப்பது என்பதைத் தாண்டி வேறு காரணங்களும் இருக்க வேண்டுமல்லாவா?

 

ஆசிரியர்களின் வாயிலாகவே அந்தக் காரணங்களைக் கேட்கலாம் வாருங்கள். அப்படியே போன வாரக் கேள்விக்கும் விடை தேடலாம்.

 

முதல் காரணம்:

என்னை வளர்த்து ஆளாக்கிய இந்த சமூகத்திற்கு நான் என் பங்களிப்பைக் கொடுக்க வேண்டும்.

இந்தக் காரணத்துடன் ஆசிரியர் ஆனவர் தான் திரு பாபர் அலி. மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர். இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே ஆசிரியர் ஆனார். தனது கிராமத்தில் இருக்கும் சிறுவர்கள் பணம் இல்லாத காரணத்தால் பள்ளிக்கு வர இயலவில்லை என்பது இவரை மிகவும் வருத்தியது. இவரது கிராமத்தில் நல்லப் பள்ளிக்கூடமும் இருக்கவில்லை. இவரே பத்து கிலோமீட்டர் பயணித்துத்தான் பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருந்தார். ஐந்தாவது வகுப்புப் படிக்கும்போது பள்ளிக்குப் போகாமலிருக்கும் சிறுவர்களுக்கு மாலைவேளைகளில் படிப்பு சொல்லித் தர ஆரம்பித்தார். தான் பள்ளியில் கற்பதை இந்தச் சிறுவர்களுக்கும் சொல்லித் தரலானார். 9 வயதில் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்த இவரே உலகின் மிக இளைய தலைமையாசிரியர் ஆக இருந்திருப்பார்.

 

சிறிய வயதிலேயே இந்தக் குழந்தைகளின் படிப்பின் மீது இவர் காண்பித்த அக்கறை இவரது வாழ்க்கையையும், இவரிடம் படிக்க வந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையையும் மாற்றியது. எட்டு மாணவர்களுடன் ஆரம்பித்த இந்தப் பள்ளிக்கூடம் இப்போது 300 மாணவர்களையும், ஆறு ஆசிரியர்களையும், பத்து தன்னார்வலர்களையும்  கொண்டுள்ளது. இவரது வீட்டின் பின்புறம் இருந்த கொய்யா மரத்தடியில் தான் இவரது தாற்காலிகப் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியில் கிடைக்கும் உடைந்த சாக்பீகஸ்ளை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் இருக்கும் சுட்டமண் பலகைகளால் கரும்பலகை செய்து பயன்படுத்துவார். இப்போது அவருக்கு 21 வயது. ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற இவர், இப்போது முதுகலை பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருக்கிறார். இவரது இந்தச் சேவையைக் கண்ட ராமகிருஷ்ணா மிஷன், மாணவர்களின் அடிப்படைத் தேவையான புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுகிறது.

 

இரண்டாவது காரணம்:

மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது.

‘கல்வியை எல்லோருக்கும் கொண்டு செல்வது தான் என் குறிக்கோள்’. இப்படிச் சொல்பவர் ‘சைக்கிள் குருஜி’ என்று மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் திரு ஆதித்ய குமார். தினமும் 60, 65 கிமீ சைக்கிளில் சென்று லக்னோ நகரில் இருக்கும் குடிசை வாழ் சிறுவர்களுக்கு இலவசக் கல்வி அளித்து வருகிறார். 1995 ஆம் ஆண்டிலிருந்து இதைச் செய்து வரும் இவர் சொல்லுகிறார்: ‘கல்விக்கூடத்திற்கு உங்களால் வரமுடியவில்லையா, அந்தக் கல்வியை நான் உங்களிடம் அழைத்து வருகிறேன்’ என்று. சைக்கிளின் பின் கரும்பலகையைக் தூக்கிச் செல்லும் இவர், குடிசைகளின் அருகில் இருக்கும் நடைபாதை, பூங்காக்கள் என்று எங்கு மாணவர்கள் இருந்தாலும் அங்கு தன் பள்ளியை நடத்துகிறார். ‘நான் அவர்களில் ஒருவன். ஏழையாகவும், ஆதரவற்றவர்களாகவும் இருப்பதின் வலியை நான் புரிந்து கொள்ளுகிறேன்’ என்கிறார் இவர்.

 

மூன்றாவது காரணம்:

கல்வித் தரத்தை உயர்த்தி, கற்கும் வழிகளை அதிக சுவாரஸ்யம் ஆக்குவது.

இந்தியா முழுவதும் நிறையப் பள்ளிகள் இயங்குகின்றன என்றாலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை, மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடுவது போன்ற குறைகள் இன்னும் களையப்படவில்லை. கல்வியின் தரத்தை உயர்த்தி, கற்கும் வழிகளையும் சுவாரஸ்யம் ஆக்குவது ஒன்றே இந்தக் குறைகளை களைய வழி. அரசு எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும் கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தி  வகுப்பறையில் மாணவர்களை உட்கார வைப்பது ஆசிரியர் தான். அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுடையது.

இதற்காக ரோஷ்ணி முகர்ஜி என்னும் ஆசிரியை இணையத்தை பயன்படுத்தி  மாணவர்களுக்கு கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். இவர் ExamFear.com என்கிற  இணையதளத்தை அமைத்து மாணவர்களுக்கு காணொளி மூலம் பாடங்களைக் கற்பிக்கிறார். இந்தக் காணொளிகளை யூடியூப்பில் ஏற்றுகிறார். இணையத் தொழில் நுட்பம் எல்லாவிடங்களிலும் இருக்கும் மாணவர்களை ஒன்று சேர்க்கிறது.

 

ஆதாரம், நன்றி : https://www.thebetterindia.com/33200/inspiring-teachers-in-india/

 


பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 6

$
0
0

 

‘உலகிலேயே மிகக்கடினமான வேலை எது?’

‘ஆசிரியப்பணி தான்’ உடனடியாக இந்த பதில் வந்தது. பதில் சொன்னவர் ஒரு ஆசிரியை.

‘அப்படியா? ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?’

‘ஸ்……..அப்பாடா……எத்தனை வேலை…….எத்தனை வேலை……..! பாடம் சொல்லித்தரணும், கேள்வி பதில் எழுத வைக்கணும், அதையெல்லாம் திருத்தணும், தேர்வு வைக்கணும், பதில் தாள்களைத் திருத்தணும்………’

மேற்சொன்ன பட்டியலில் இருப்பதை மட்டும் செய்வதல்ல ஒரு ஆசிரியரின் வேலை. அதையும் தாண்டி மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மிகச் சிறந்த ஆசிரியர்கள் எல்லோரும் அதைச் செய்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வெற்றி பெற்ற ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற ஆசிரியர்களின் குணாதிசயங்கள் என்னென்ன?

 

கற்பிப்பதை விரும்ப வேண்டும்.

27 ஆம் தேதி ஜூலை மாதம்.

நமது குடியரசுத் தலைவராக இருந்து மறைந்த திரு அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம். ‘பெரிதாகக் கனவு காண்’ என்று இளம் உள்ளங்களில் கனவு விதை விதைத்தவர். ‘உன்னைத் தூங்கவிடாமல் செய்வது தான் கனவு’ என்றவர்.

அவர் தனது பள்ளி நாட்களை நினைவு கூறும் போது தனது ஆசிரியர்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்: ‘நான் கல்வி கற்ற நாட்களில் மிகச் சிறந்த ஆசிரியர்கள் வாய்த்தது நான் செய்த பாக்கியம். ஒரு ஆசிரியர் கற்பிப்பதை விரும்ப வேண்டும். கற்பித்தல் என்பது தான் ஒரு ஆசிரியரின் ஆன்மாவாக இருக்க வேண்டும். இங்கு எனது ஆசிரியர்களில் ஒருவரை உதாரணமாகக் காண்பிக்க விரும்புகிறேன்:

1936 ஆம் வருடம். எனக்கு அப்போது 5 வயது. ராமேஸ்வரம் பஞ்சாயத்து ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அந்த வகுப்பில் எனது ஆசிரியர் முத்து ஐயர். வகுப்புப் பாடப்பயிற்சிகளை நான் நன்றாகச்  செய்வேன். அதனால் என் மீது எனது ஆசிரியருக்கு தனியான ஒரு ஆர்வம். எனது வீட்டிற்கு வந்து எனது அன்னையிடம் நான் மிகவும் நன்றாகப் படிப்பதாகவும், நல்ல மாணவன் என்றும் கூறினார். என் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் அம்மா எனக்குப் பிடித்த இனிப்பு செய்து கொடுத்தார். ஒரு நாள் நான் பள்ளிக்கு செல்லவில்லை. அன்று மாலை முத்து ஐயர் என் வீட்டிற்கு வந்துவிட்டார். ஏதாவது பிரச்னையா நான் பள்ளிக்கு வருவதில் என்று கேட்டுவிட்டு, அவரால் முடிந்த உதவியைச்  செய்வதாக என் தந்தையிடம் கூறினார்.

 

எனது கையெழுத்து மோசமாக இருப்பதைப் பார்த்துவிட்டு எனது தந்தையிடம் ஒரு மூன்று பக்கங்கள் கொண்ட பயிற்சி புத்தகத்தைக் கொடுத்து நான் தினமும் அதில் எழுதிப் பழக வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனார். அவர் ஒரு நல்ல ஆசிரியர் மட்டுமல்ல; ஒரு மாணவனை அவன் திறன் அறிந்து ஊக்குவித்து, அவனை நல்லபடியாக உருவாக்குவதும் தன் கடமை என்று நினைத்த ஒரு மாபெரும் மனிதரும் கூட. பள்ளி வளாகத்திற்கு வெளியேயும் மாணவனைப் பற்றிக் கவலைப்படும்  ஆசிரியரே சிறந்த ஆசிரியர் என்று சொல்ல வேண்டும்.

 

சிறந்த கல்வியாளர் – கல்வி கற்பிப்பவர் என்ற நிலையை அடைய விரும்ப வேண்டும்

ஒரு ஆசிரியர் சிறந்த கல்வி கற்பிப்பவர் ஆக இருக்க வேண்டும். கற்பிப்பதற்கு வேறுவேறு முறைகளைக் கடைப்பிடித்தாலும், மாணவர்களையும் கற்பிப்பதில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். வெறும் கருத்துப்படிவங்களை மட்டும் கற்பிக்காமல் அவை நடைமுறையில் பயன்படுத்தப்படுவதையும் சொல்லித் தர வேண்டும். பாடப் புத்தகங்களில் படிப்பது ஏட்டுச் சுரைக்காய் என்று ஆகிவிடக்கூடாது. மாணவர்களின் கவனம் சிதறாமல் கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு ஆசிரியருக்கு ஆர்வம் இருக்குமானால் அதைப் பற்றிய அறிவை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அவரது அறிவுத்திறன் மேலும் கூடுகிறது.

 

ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல; தினமும் அவரும் மாணவர்களுடன் சேர்ந்து கற்றுக்கொள்ளுகிறார். ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு இந்தக் கற்றல் என்று கூடச் சொல்லலாம்.

 

ஒரு ஆசிரியர் ஆவதற்காக நீங்கள் கற்கும் கல்வி உங்கள் கண்களைத் திறக்கிறது.  மாணவர் எப்படிக் கற்கிறார்; நீங்கள் எப்படி ஒரு சிறந்த ஆசிரியராக இருப்பது போன்ற பலவிஷயங்களைக் கற்றுக் கொள்ளுகிறீர்கள். எந்த பாடத்தை நீங்கள் சொல்லிக் கொடுப்பதாக இருந்தாலும் அதைத்தவிர பல்வேறு விஷயங்களிலும் உங்கள் அறிவுத் திறன் ஆழமாகவும் அதிகமாகவும் ஆகிறது.

 

கற்பித்தல் என்பது பலவிதங்களில் உங்களை மாற்றுகிறது; மேன்மைப் படுத்துகிறது. உங்களைப்பற்றி நீங்களே அறியாத பலவிஷயங்கள் உங்களுக்குத் தெரிய வருகிறது. ஒரு விஷயத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கும் போது அதனை எளிதாக அவர்களுக்குப் எப்படி புரிய வைப்பது என்பதை நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கிறீர்கள். அதற்கான வழிமுறைகளைத் தேடுகிறீர்கள். மாணவர்களுடன் பேசுவது, அவர்களது கவனத்தை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்வது, நீங்கள் பேசுவதை அவர்கள் கேட்கும்படி செய்வது என்று பல்வேறு கோணங்களில் சிந்திக்க ஆரம்பிக்கிறீர்கள். இந்த சிந்தனையே உங்களுக்குப் பல கதவுகளைத் திறக்கும்.

 

வகுப்பில் நீங்கள் சொல்லித் தருவதுடன் நின்று விடாமல், மேலும் மேலும் தேட வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களிடையே உண்டாக வேண்டும். அவர்களது அறிவுப்பசியை மேலும் மேலும் தூண்டுவது கூட ஒரு ஆசிரியரின் கடமைதான்.

 

தொடர்ந்து பேசுவோம்.

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7

$
0
0

 

 

நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில:

 

ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

திரு அப்துல் கலாம் இதற்கு மிக அழகாக தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லுகிறார்.

‘எனக்கு அப்போது பத்து வயது. ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எனது ஆசிரியர் திரு சிவசுப்பிரமணிய ஐயர். எங்கள் எல்லோருக்கும் அவரது வகுப்பு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அவர் பறவை பறக்கும் விதம் பற்றி பாடம் நடத்தினார். ஒரு பறவையின் படத்தை கரும்பலகையின் மேல் வரைந்தார். வால் பகுதி, இறக்கைகள், தலை, உடம்பு என்று ஒவ்வொன்றாக வரைந்து அது எப்படி தன் உடலைத் தூக்கிக்கொண்டு பறக்கிறது;  பறக்கும்போது அது எப்படி தன் பறக்கும் திசையை மாற்றுகிறது, தன் உடம்பை இழுத்துக் கொண்டு எப்படிப் பறக்கிறது என்று விளக்கினார். பத்து, இருபது என்று பறவைகள் சேர்ந்து பறப்பதையும் விளக்கினார்.

 

கடைசியில் ‘புரிந்ததா?’ என்று கேட்டார். நான் எழுந்திருந்து ‘புரியவில்லை, ஐயா’ என்று சொன்னேன். பல மாணவர்கள் புரியவில்லை என்றனர். அதற்கு அவர் கோபப்படவேயில்லை. ‘இன்று மாலை கடற்கரைக்குச் செல்லலாம்’ என்றார். மாலை மொத்த வகுப்பும் கடற்கரையில் இருந்தது. இனிமையான மாலை வேளை. பெருத்த சத்தத்துடன் அலைகள் பாறைகளின் மீது வந்து மோதுவதை நாங்கள் எல்லோரும் ரசித்துக் கொண்டிருந்தோம். கடற்பறவைகள் பத்து, இருபது என்று சேர்ந்து பறப்பதை ஒரு புதிய ஆர்வத்துடன் பார்த்தோம். எங்கள் ஆசிரியர். ‘பறவைகளைப் பாருங்கள், பிள்ளைகளே!’ என்றார். பறவைகள் தங்கள் சிறகுகளை அடித்துக் கொண்டே தங்கள் உடலை உயரே தூக்குவதைக் கண்டோம். தங்கள் வாலை திருப்பி பறக்கும் திசையை மாற்றுவதையும் கண்டோம். பறவைகளின் செயல்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காலையில் நடத்திய அதே பாடத்தை விளக்கினார் ஆசிரியர்’.

 

‘எனக்கு அந்த மாலை மறக்க முடியாத மாலை ஆயிற்று. பறவைகள் பறப்பத்தைப் பார்க்க மட்டுமே நான் அங்கு வரவில்லை என்ற உண்மை புரிந்தது. எதிர்காலத்தில் நான் என்ன படிக்க வேண்டும் என்று அந்த மாலைவேளை தான் தீர்மானித்தது. ‘பறத்தல்’ என்பதை ஒட்டியே எனது எதிர்காலப் படிப்பு அமைய வேண்டும் என்று உறுதி பூண்டேன். உண்மையில் எனக்கு அதற்கு முன் பறத்தல் விஞ்ஞானம் பற்றி எந்தவித அறிவும் இருந்திருக்கவில்லை. எனது ஆசிரியரின் கற்பிக்கும் விதம், ஏட்டுக்கல்வியை நடைமுறையில் சாத்தியப்படுத்தியது எல்லாமும் சேர்ந்து எனது வாழ்வின் குறிக்கோளை நிர்ணயித்தது.

 

ஒருநாள் வகுப்பு முடிந்தபின் என் ஆசிரியரிடம் சென்று எனது எதிர்கால ஆசையைக் கூறினேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டேன். அவர் மிகவும் பொறுமையாக என்னிடம் சொன்னார்: ‘நீ முதலில் எட்டாம் வகுப்பு முடிக்க வேண்டும். பிறகு உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டும். அதன் பிறகு கல்லூரியில் பறத்தல் சம்மந்தப்பட்டப் படிப்பை படிக்க வேண்டும் என்றார். உண்மையில் எனது ஆசிரியர் எனது வாழ்வின் குறிக்கோளைத் தீர்மானித்தார் என்றே சொல்ல வேண்டும்.

 

கல்லூரியில் நான் இயற்பியல் (Physics) எடுத்துக் கொண்டேன். அதைத் தொடர்ந்து மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வானூர்தி அறிவியல் பாடத்தை எடுத்துக் கொண்டு படித்தேன். இப்படித்தான் எனது வாழ்வு ஒரு ராக்கெட் விஞ்ஞானி, விண்வெளி பொறியியலாளர், தொழில்நுட்ப விஞ்ஞானி என்று மாறியது.

 

திரு சிவசுப்பிரமணியம் போன்ற ஆசிரியர்கள் மாணவர்களது வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

 

கற்பதில் ஒரு நிர்பந்தத்தை உண்டாக்க வேண்டும்

 

இதற்கும் திரு கலாம் தம் வாழ்க்கையிலிருந்தே ஒரு உதாரண ஆசிரியரைக் காட்டுகிறார்.

‘நான் எம்ஐடி- இல் படித்துக் கொண்டிருந்த போது நானும் எனது வகுப்புத் தோழர்கள் ஐந்து பேர்களும் சேர்ந்து ஒரு செயல்முறைத் திட்டம் செய்ய வேண்டி வந்தது. ஒவ்வொருவருக்கும் அந்த செயல் திட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பு. எங்களது வரைவுப் பேராசிரியரும், எம்ஐடியின் அப்போதைய இயக்குனரும் ஆன திரு ஸ்ரீநிவாசன் ஒருமுறை நாங்கள் எத்தனை தூரம் எங்கள் செயல் திட்டத்தை முடித்திருக்கிறோம் என்று பார்க்க வந்தார். எங்கள் வேலை மிகவும் ஏமாற்றத்தை அளிப்பதாகச் சொன்னார். நான் அவரிடம் ஆறு பேர்கள் இருப்பதால் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள கஷ்டங்களைச் சொல்லி, ஒரு மாதத்தில் எல்லாவற்றையும் செய்து முடித்து அவரிடம் கொடுப்பதாகச் சொன்னேன். அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. ‘இதோ பார் இளைஞனே! இன்றைக்கு வெள்ளிக்கிழமை. திங்கட்கிழமை உன்னுடைய கட்டமைப்புத் திட்டம் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் உனது ஸ்காலர்ஷிப் நிறுத்தப்படும்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 

எங்களுக்கு வேறு வழியே தெரியவில்லை. இரண்டு நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து வேலையை முடித்தோம்.  ஞாயிற்றுக்கிழமை நான் என்னுடைய வரைவை சரிபார்த்துக் கொண்டிருந்தேன். யாரோ என்னருகே நிற்பது போல உணர்ந்தேன். எனதருமை ஆசிரியர் தான் நின்று கொண்டிருந்தார். என்னுடைய வரைவு பார்த்துவிட்டுச் சொன்னார்: ‘எனக்குத் தெரியும் நான் உன்னை மிகவும் அழுத்தம் கொடுத்து வேலையைச் செய்யச் சொல்லியிருக்கிறேன் என்று. உன் செயல்திட்டம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது’ என்று பாராட்டினார்.

 

கல்வி என்பது மிகவும் சீரியஸ்ஸான விஷயம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இந்த ஆசிரியர்.

 

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 8

$
0
0

 

 

இந்தத் தொடரில் இதுவரை உதாரண அம்மா, உதாரணத் தந்தை, ஆசிரியர்கள் என்று பார்த்துக் கொண்டு வந்தோம். இனி மாணவர்களைப் பார்ப்போம். உதாரண மாணவர்கள் என்று இருக்கிறார்களா? நிச்சயம் இருக்கிறார்கள். அவர்களைப் பார்ப்போம் இந்தப் பகுதியில். இந்தத் தொடரின் முக்கியமானவர்கள் இவர்கள் தான்.

ஆசிரியர்களுக்கு எல்லா மாணவர்களுமே முக்கியமானவர்கள் என்றாலும், சில மாணவர்கள் அதிக கவனம் பெறுகிறார்கள். அவர்கள் யார்?

 

கேள்வி கேட்கும் மாணவர்கள்:

ஆசிரியர் ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு புரிகிறதா என்று கேட்கிறார். எத்தனை மாணவர்கள் புரியவில்லை என்று நம் கலாம் ஐயா போல கேட்கிறார்கள்? ஆசிரியர் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் புரிந்தது என்று தலையாட்டிவிடும் மாணவர்கள் தான் இங்கு அதிகம். உண்மையான சந்தேகம் இருந்தால் எந்த ஆசிரியரும் கோபிக்க மாட்டார். மாறாக, இன்னும் அதிக கவனத்துடன் மாணவர்களுக்குப் புரியும் வகையில் விளக்குவார்.

வகுப்பில் கேள்வி கேட்கவேண்டிய அவசியம் என்ன? ஒரு புதிய கருத்துப் படிவத்தை ஆசிரியர் விளக்கும் போது புரிந்து கொண்டால் தான் அடுத்தடுத்த பாடங்கள் புரியும். அடிப்படை புரிந்தால் தான் அதே கருத்துப் படிவத்தை ஒட்டி வரும் பாடங்கள் புரியும். அதனால் மாணவர்கள் நிச்சயம் தங்களது சந்தேகங்களை உடனடியாக ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ஒரு மாணவன் கேட்கும் கேள்வி பல மாணவர்களின் சந்தேகத்தைத் தீர்க்கலாம்.

 

கடுமையாக உழைக்கும் மாணவர்கள்:

எல்லா மாணவர்களுமே இயற்கையிலேயே புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. சிலர் தங்கள் கடின உழைப்பால் புத்திசாலியாக மாறுவார்கள். இப்படிப்பட்ட மாணவர்களை ஆசிரியரும் விரும்புவார். பள்ளிப் பருவத்திலேயே இத்தகைய கடின உழைப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் பிற்காலத்தில் பெரிய வெற்றியும் பெறுகிறார்கள். குறித்த நேரத்தில் பாடங்களைப் படித்து முடிப்பது, வீட்டுப் பாடங்களை தவறாமல் செய்து கொண்டு வருவது, தேர்வு சமயங்களில் அதிகப்படியான நேரம் படிப்பது என்று இவர்கள் தங்கள் உழைப்பினால் சிறந்த மாணவர்கள் ஆகிறார்கள். இவர்களில் சிலருக்கு தங்கள் குறைகளும் தெரிந்திருக்கும். அந்தக் குறையை எப்படி சரி செய்து கொள்வது என்பதையும் அவர்களே தீர்மானித்து அதற்கும் சேர்த்து உழைக்கிறார்கள் இந்த வகை மாணவர்கள்.

 

பாடங்களுக்கு வெளியே தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் மாணவர்கள்:

இந்த வகை மாணவர்கள் ஏதாவது விளையாட்டிலோ, அல்லது மாணவர் சங்கத்திலோ பங்கெடுக்கிறார்கள். இவற்றில் பங்கேற்பதன் மூலம் ஏற்படும் அனுபவங்கள் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. வெளியே கிடைக்கும் அனுபவங்கள் அவர்களை பன்முகத் திறமையாளர்களாக மாற்றுகிறது. முக்கியமாக பலருடன் கலந்து பழகுவது; ஒரு குழுவாக எல்லாரையும் அனுசரித்துப் போவது போன்ற அனுபவங்கள் அவர்களைப் படிப்பிலும் கவனம் செலுத்தும்படி செய்கிறது. தங்களுடன் கூடப் படிக்கும் மாணவர்களுக்கும் இவர்கள் உதாரணமாக இருந்து அவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு பொதுவான குறிக்கோளை வெற்றிகரமாக அடைகிறார்கள். தன்னிச்சையாக தலைமைப் பண்பும் இவர்களிடம் மலர்கிறது.

 

தலைமைப் பண்பை இயற்கையாகப் பெற்றிருக்கும் மாணவர்கள்:

சிறுவயதிலிருந்தே சில மாணவர்கள் வகுப்பறையில் சில வேலைகளை தாங்களாகவே முன்வந்து செய்வார்கள். உதாரணமாக ஆசிரியர் வருவதற்கு முன் கரும்பலகையைத் துடைத்து நாள், தேதி இவைகளை எழுதுவது; நல்ல வாக்கியங்களை எழுதுவது என்று  மிகவும் உற்சாகத்துடன் செய்வார்கள். பெரிய வகுப்பிற்குப் போனாலும் இந்த செய்கைகள் தொடரும் வேறுவிதமாக. ஆசிரியர் பாடம் நடத்தி முடித்தவுடன் தன் வகுப்பு மாணவர்களுடன் கலந்து உரையாடி, புரியாதவற்றைப் புரிய வைப்பது என்று தலைமைப் பண்பை வெளிப்படுத்துவார்கள். வகுப்பில் ஏதாவது தேவைப்பட்டால் இந்த மாணவர்களே ஆசிரியரிடம் பேசுவார்கள். மற்ற மாணவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவர்கள் மட்டுமே இப்படி தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த முடியும். உதாரணமாக இருந்து மற்றவர்களையும் நடத்திச் செல்லுவதுடன், சோர்ந்திருப்பவர்களை உற்சாகப்படுத்துவதும் இந்த வகை மாணவர்களே.

 

ஊக்கசக்தி அளிக்கும் மாணவர்கள்:

படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஆசிரியரிடமிருந்து வரலாம்; பெற்றோர்களிடமிருந்து வரலாம்; ஆனால் கூடப்படிப்பவர்களிடமிருந்து வரும்போது அதன் சக்தியே தனிதான். படிக்க வேண்டும் என்ற உந்துதல் இல்லாத மாணவனை கையாளுவது கடினமான விஷயம். வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களில் ஒன்றிரண்டு பேர்கள் இப்படிப்பட்டவர்களாக அமைந்துவிட்டால் ஆசிரியரின் பாடு திண்டாட்டம் தான். அவர்களை ரொம்பவும் நெருக்கினால் பள்ளிக்கூடத்தை விட்டே நின்று விடும் அபாயமும் இருக்கிறது. தாங்களாகவே உற்சாகத்துடன் படிக்கும் மாணவர்கள் படிப்பதில் ஆர்வம் காட்டாத மாணவர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வந்து படிக்க வைத்துவிடுவார்கள். ஆசிரியர்களுக்கும் உதவுவார்கள்.

 

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் மாணவர்கள்:

படிக்க வேண்டும் என்ற உந்துதலும், வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துதலும் ஒரு மாணவனை சிறந்த மாணவனாக்குகிறது. கல்வி இலவசமாகக் கிடைத்தால் கூட அதை சரியானபடி பயன்படுத்தாத மாணவர்களை என்ன செய்ய? கட்டாயக்கல்வி என்று சொன்னால் கூட எத்தனை பேர்கள் பள்ளிக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள்? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பை விட்டுவிடாமல் அதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

 

ஆசிரியராக இருந்து நம் நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதரைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம். அவரது பிறந்தநாள் தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அடுத்த வாரம் சந்திக்கலாமா?

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 9

$
0
0

ஆசிரியர் தின வாழ்த்துகள்!  Published on 1.9.2018

 

நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்தவர் திரு சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். அன்றைய மதராஸ் மாகாணத்தில் திருத்தணியில் 1888 ஆம் ஆண்டு ஒரு ஏழ்மையான குடும்பத்தில் வீராச்சாமி – சீதம்மா தம்பதிக்கு பிறந்தவர் இவர்.

மாணவர்களின் முழுத்திறமையையும் வெளிக்கொணர்வதற்கு முழு முயற்சி செய்பவர் நல்லாசிரியர் என்று பார்த்தோம். அப்படிப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர் தான் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன். ஆசிரியராக தன் வாழ்வைத் தொடங்கியவர் நாட்டின் முதல் குடிமகனாக – நமது நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக ஆனார். ஒரு ஆசிரியருக்குக் கிடைக்ககூடிய மிகப்பெரிய விருது இது, அல்லவா?

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மேல்படிப்பு படிக்க விரும்பியவரை அவரது தந்தை ஒரு கோவிலில் பூசாரி வேலைக்குப் போகச் சொன்னார். ஆனால் கடினமாக உழைத்து சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் உதவித்தொகை பெற்று 1906 இல் பி.ஏ. ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார்.

இயற்பியலில் ஆர்வம் இருந்தபோதிலும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் தனது தத்துவப் பாடநூல்களை இலவசமாகத் தர அதையே தன் விருப்பப் பாடமாக எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாகப் படித்து முடித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் பிறகு மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். கல்கத்தா பல்கலைக் கழகத்திலிருந்து மனநலம் மற்றும் அறநெறி பேராசிரியர் ஆக பணியாற்ற அழைப்பு வர மைசூரிலிருந்து கல்கத்தா சென்றார். மைசூர் பல்கலைக்கழக மாணவர்கள் அவருக்கு மிகச்சிறப்பான பிரிவு உபசார விழாவை நடத்தினர். விழா முடிந்து வெளியே வந்த அவரை அந்த மாணவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் உட்கார வைத்து மைசூர் ரயில் நிலையம் வரை வண்டியை அவர்களே இழுத்துச் சென்று அவருக்குப் பிரியா விடை கொடுத்தனர்.

கல்கத்தாவில் பணியாற்றும்போது திரு ரபீந்திரநாத் தாகூருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததது அவருக்கு.  ரபீந்திரநாத்தின் தத்துவங்கள் இந்தியக் கலாசாரத்தை ஒட்டி இருந்தது அவரை மிகவும் கவர்ந்தது. அவரது தத்துவங்கள் இந்திய ஆன்மாவின் வெளிப்பாடாக இருந்தபடியால், தனது முதல் புத்தகத்தை நோபல் பரிசு பெற்ற தாகூரின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதினர்.

அந்தச் சமயத்தில், மான்செஸ்டர் கல்லூரியிலும், சிகாகோவிலும் பேருரை ஆற்ற அழைக்கப்பட்டார். கீழை மதங்கள் பற்றிய விரிவுரை ஆற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டார். மூன்று வருடங்கள் இந்தப் பணியில் இருந்தார் திரு இராதாகிருஷ்ணன். மேலைநாடுகளில் பேசும்போது இந்தியாவின் சுதந்திர வேட்கை பற்றித் தவறாமல் குறிப்பிடுவார்.

பிற்காலத்தில் பல தத்துவப் புத்தகங்களும் எழுதினார். ‘தி ரிலிஜன் வீ நீட்’ (The Religion We Need), ‘தி ஹார்ட் ஆப் ஹிந்துஸ்தான்’ (The Heart of Hindustan) மற்றும் ‘தி ப்யூச்சர் சிவிலைசேஷன்’ (The Future Civilisation) ஆகிய புத்தகங்களை வெளியிட்டார்.

இந்தியத் தூதர் (1949-53) ஆக அன்றைய சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டார்.  அந்தச் சமயத்தில் இந்திய தத்துவஞானிகளுக்கு ரஷ்யாவில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தன. ரஷ்யாவின் ஸ்டாலின் 1950 ஜனவரியில் திரு ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார். ஸ்டாலின் கேட்ட பல கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாக பதில் சொன்னார் திரு இராதாகிருஷ்ணன்.  இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் நல்லவிதமான நட்பு நிலவ இவர் பலவிதங்களில் முயற்சி செய்தார்.

1962 ஆம் ஆண்டு நமது நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார் திரு இராதாகிருஷ்ணன். இந்தச் செய்தியைக் கேட்டு உலகின் தலைசிறந்த தத்துவஞானி திரு  பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (Bertrand Russell) கூறினார்: ‘இது தத்துவஞானத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவர் ஆனது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தத்துவஞானி ப்ளாட்டோ (Plato) தத்துவஞானிகள் அரசர்களாக வேண்டும் என்று விரும்பினார். இந்தியா தன் பங்கிற்கு ஒரு தத்துவஞானியை குடியரசுத் தலைவர் ஆக்கி மரியாதை செய்திருக்கிறது’.

இவர் குடியரசுத் தலைவராக இருந்த ஐந்து வருடங்கள் இந்தியா மிகச் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரண்டு பிரதமர்களின் மறைவு: திரு நேரு, திரு சாஸ்திரி. சுதந்திர இந்தியாவின் சீனா, பாகிஸ்தானுடனான இரண்டு போர்கள். இந்தியா சந்தித்த இடர்கள் இவரது வலுவான தலைமையின் கீழ் கடந்து போயின. இவர் செய்து வந்த இன்னொரு காரியம் நமக்கு மிகுந்த வியப்பைத் தரும். ஒவ்வொரு மாதமும் தனது ஊதியத் தொகையான ரூ.10,000-த்தில் தனக்கென்று ரூ.2500 மட்டும் வைத்துக்கொண்டு மீதித் தொகையை பிரதம மந்திரி நிவாரண நிதிக்குக் கொடுத்துவிடுவாராம். என்ன ஒரு விந்தை மனிதர்! இல்லை எளிமையான தலைவர்.

 

பார்ப்பதற்கு மிகுந்த கண்டிப்பான தலைமையாசிரியர் போலத் தோற்றமளித்தாலும், நகைச்சுவை உணர்வு மிக்கவர் நமது இரண்டாவது குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இவர் இருந்தபோது 1962 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் அரசர் இந்தியாவின் விருந்தினராக வருகை தந்திருந்தார். அவரிடம் நமது குடியரசுத் தலைவர், ‘மாண்புமிகு அரசரே! கிரீஸ் நாட்டிலிருந்து எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் முதல் அரசர் நீங்கள் தான். அலெக்சாண்டர் அழைக்காமல் வந்தவர்!’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டாராம்.

 

நோபல் பரிசிற்காக இவரது பெயர் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் பரிந்துரைக்கப்பட்டது இவருக்கும், இந்தியாவிற்கும் கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்று சொல்ல வேண்டும்.1975 ஆம் ஆண்டு இவருக்கு டெம்பிள்டன் பரிசு கிடைத்தது.  பரிசுத் தொகை அனைத்தையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு நன்கொடையாக வழங்கிவிட்டார்.

 

இவரது கல்விக் கொள்கைகள் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

 

 

 

 

 

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 10 

$
0
0

 

 

ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்

 

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், மாணவர்களால் சிறந்த ஆசிரியர் என்று அழைக்கப் பட்டார். மாணவர்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், தனி அக்கறை காட்டிய அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியராக விளங்கினார். அவர் வகுப்புகளில் விரிவுரை ஆற்றும்போது அதனைக் கேட்க மற்ற கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வருவார்களாம். வெறும் ஆசிரியராக மட்டுமல்லாமல், சிறந்த கல்வியாளர் என்ற பெயரையும் பெற்றிருந்தார் இவர்.

 

இந்தியா விடுதலை பெற்றவுடன் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையில் பத்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைவதற்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட்டது. அக்குழுவை இந்தியாவில் உள்ள இருபத்தைந்து பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் சென்றும், நேரில் ஆய்வு செய்தும், சிறப்பான அறிக்கையை அரசுக்கு அளித்தார்.

 

புகழ் பெற்ற பெனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இவர் இருந்த போது  நாட்டின் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அடக்கு முறையை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர்; பிரிட்டிஷ் அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத்தை அனுப்பி, மாணவர்களை ஒடுக்க முயன்றது. ஆனால் துணைவேந்தராய் இருந்த டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணன், நாட்டுப்பற்று மிக்க நல்லறிஞர் என்பதால், மாணவர்கள் சார்பாக நின்றார். இராணுவம் பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தினார். வால்டேரில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய போது, அந்தப் பல்கலைக்கழகத்தினைத் தனித் தகுதி பெற்ற கல்வி நிறுவனமாக உயர்த்தினார். அப்பல்கலைக்கழகத்தில் சிறந்த நூலகத்தையும் உருவாக்கினார்.

 

கல்விச் சிந்தனைகள்:

இந்தியா ஆங்கிலேயர்களின் கீழ் இருந்த காலகட்டத்தில் சிலர் ஆங்கிலக் கல்வியை அடியோடு வெறுத்தனர். ஒரு சிலர் அதனை ஏற்றுக்கொண்டு நமது கலாச்சாரம், பழக்க வழக்கங்களை அடியோடு மறந்தனர். ஆனால் திரு இராதாகிருஷ்ணன் தாம் பெற்ற ஆங்கிலக் கல்வி மூலம் எண்ணற்ற நவீன கருத்துக்களை உலகிற்கு அளித்ததோடு, மூட நம்பிக்கைகள், அடிமைத்தனம் ஆகியவற்றை எதிர்ப்பவராகவும் இருந்தார். மேலை நாட்டுக்கல்வி பயின்றிருந்த போதிலும் எளிமையான பழக்க வழக்கங்களைக் கை கொண்டிருந்தார்.

‘கல்வி என்பது ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த ஆளுமையையும் வளர்க்கும் ஒரு முயற்சி. தன் வகுப்பு மாணவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை கொண்டு அவர்கள் முன்னேற பாடுபடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர்வீரனே. அதில் வெற்றியோ, தோல்வியோ ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது’ என்பார் இவர்.

இயற்கையோடு இயைந்த கல்வியை வரவேற்றவர் இவர். கல்வி கற்கும் திறன் இருப்பதுதான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்பார்.

கல்வியின் நோக்கம் மனித மனதினுள் இருக்கும் இருட்டை நீக்கி ஒளி பாய்ச்சுவது; அன்பை வளர்ப்பது; உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவது. கல்வி மனிதனை அவனுடனேயே அமைதியாக வாழச் செய்வது. தொழில் கல்வி மனிதனை தொழில் நுட்பம் தெரிந்தவனாக மாற்றும். அவனை நல்ல மனிதன் ஆக்காது. விஞ்ஞானம் இயற்கையை வெற்றி கொள்ளவும் பூமியைச் சூறையாடவும் உதவும். விஞ்ஞானத்தால் காற்றில் பறக்கவும், நீரில் நீந்தவும் முடியும். ஆனால் இவை மனிதனின் உண்மையான இயல்பு அல்ல. கல்வி மனிதனை தன் இயல்புடன் வாழச் செய்ய வேண்டும்.

*மன நோய்கள், மனப் பதட்டம் ஆகியவை தவறான கல்வியின் விளைவு. மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி. இதனால் சமூக நீதியும், சுமுகமான மனித உறவுகளும் வளரும்.

  • தாய் மொழியிலேயே பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவது தான் சிறந்தது.
  • ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். மாணவர்களை அறிவுத்தாகம் கொண்டவர்களாக மாற்றி அவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும்.
  • அனைவருக்கும் உயர்கல்வி அளிப்பது அரசின் கடமையாகும்.
  • கல்வியானது மனிதனை நெறிமுறைப்படுத்துவதோடு சுதந்திரச் சிந்தனையாளனாக்க வேண்டும்.
  • பல்கலைக் கழகங்கள், மனித நேயத்தையும், கருத்துப் புதுமையையும், உண்மைத் தேடலையும் நோக்கமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும். தூய்மைக்கும், ஆய்வுக்கும், ஞானத்துக்கும் வழிகாட்ட வேண்டும். ஒழுக்க உணர்வுக்கும், உள்ளத் பயிற்சி அளித்திட வேண்டும்
  • ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் – அறிவியல் வல்லுநர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், புதியன கண்டுபிடிப்பவர்கள், மறைந்துள்ளவற்றைத் தேடி அறிபவர்கள் ஆகியோருக்குப் பல்கலைக் கழகங்களில் பயிற்சிகள் தருதல் வேண்டும்.

 

அவரின் சமூகச் சிந்தனைத் துளிகள் சில:

 

  • சாதியம், சுய சிந்தனையின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் வளர்வதை ஊக்கப் படுத்துகிறது. இதனால் ஒழுக்கம் கெட்டுவிடுகிறது. ஒருவரை ஒருவர் அவமதிக்கும் செயல்கள் பெருகின. எனவே, எந்தச் சாதியும், சமயமும், தத்துவமும் மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தால் தூக்கி எறிந்துவிட வேண்டும்.
  • கடமைகளையும் உரிமைகளையும் பிரித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும்.
  • அணு ஆயுதங்களின் கொடுமையால் ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து பாழாகிறது. எனவே, அணு ஆயுதங்களை எந்த நாடும் போரில் பயன்படுத்தக் கூடாது.‍

 

இந்த மேதை எழுதிய சில புத்தகங்கள்

  1. உண்மையைத் தேடி
  2. இரவீந்திரநாத் தாகூரின் தத்துவம்
  3. இந்தியத் தத்துவம்
  4. ஓர் இலட்சியவாதி நோக்கில் வாழ்க்கை
  5. கல்வி – அரசியல் – போர்
  6. சமயமும் சமுதாயமும்
  7. மாறிவரும் உலகில் சமயம்

 

இவை தவிர்த்து, இருபதுக்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான மேலும் பல நூல்களை இந்திய மக்களுக்கு வழங்கியுள்ளார்.

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 11 

$
0
0

vivekanandar - firstbook

 

செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி 1893:

இன்றைக்கு சரியாக 125 ஆண்டுகளுக்கு முன் சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை நிகழ்த்தினார். நமது தாய்த்திருநாட்டின் பெருமையை அயல்தேசத்தில் நாட்டிய பெருமை சுவாமிஜியையே சேரும். அவரைப் பற்றி பேசிவிட்டு பிறகு நம் தொடரைத் தொடருவோம்.

 

மிச்சிகன் அவென்யுவில் சிகாகோ கலைக்கழகம் அமைந்திருந்தது. ஓவியங்கள், சிற்பங்கள், செப்புச் சிலைகள் என்று பல்வேறு கலைப் பொருள்களை உள்ளடக்கி உலகக் கண்காட்சியின் ஒரு அம்சமாக இந்தக் கட்டிடம் அமைந்திருந்தது. அங்கிருந்த கொலம்பஸ் ஹாலில் சர்வமத மகா சபை 1893 செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 27 வரை கூடியது.

 

சர்வமத மகாசபையில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் அமரும் மேடை 50 அடி நீளமும்,  15 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. ரோமானிய மேதை மார்கஸ் டுல்லியஸ் ஸிஸரோ, கிரீஸின் மிகச்சிறந்த பேச்சாளர் டெமஸ்தனிஸ் ஆகிய இருவரின் பளிங்குச் சிலைகள் அந்த மேடை மீது இருந்தன. இவைகளுக்கு நடுவே உயர்ந்த இரும்பு நாற்காலி சிம்மாசனம் போல போடப்பட்டிருந்தது. இந்த சிம்மாசனத்திற்கு இருபக்கமும் 3 வரிசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வரிசையிலும் முப்பது நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேடையின் பின்புற அலங்காரம் கண்ணைக் கவரும் ஹீப்ரு, ஜப்பானிய ஓவியங்களால் செய்யப்பட்டிருந்தது. டெமஸ்தனிஸ் சிலைக்குப் பக்கத்தில் வலது கையால் ஒரு பறவையைப் பறக்க விடுவது போல நிற்கும் கல்வி தேவதையின் செப்பு சிலை ஒன்றும் மேடையை அலங்கரித்தது.

 

காலை பத்து மணி. சர்வமத மகா சபையில் கலந்து கொள்ளும் உலகின் பத்து முக்கிய மதங்களை குறிக்கும் வகையில் அங்கிருந்த நியூ லிபர்டி மணி பத்து முறை அடித்தது. அமெரிக்க கத்தோலிக்க சபையில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் கார்டினல் கிப்பன்ஸும், வழக்கறிஞர் போனியும் கை கோர்த்தபடி முன்நடத்தி செல்ல, பிரதிநிதிகளின் ஊர்வலம் தொடங்கியது. பிரதிநிதிகளின் உடைகள், அவர்கள் ஏந்திவந்த மதச் சின்னங்கள், அவர்களின் விதம்விதமான தலை அலங்காரங்கள் எல்லாமே பார்வையாளர்களிடையே ஒரு வித உற்சாக எதிர்பார்ப்பை உருவாக்கியது.

 

சுவாமிஜி சிவப்பு வண்ண உடையும், மஞ்சள் வண்ண தலைப்பாகையும் அணிந்து 31ஆம் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் பம்பாயின் நகர்கர், இலங்கையின் தர்மபாலர், மஜூம்தார், சமண மதத்தைச் சேர்ந்த வீர்சந்த் காந்தி, தியசாபிகல் சொசைட்டியின் பிரதிநிதிகள் ஞான் சந்திர சக்கரவர்த்தியும், அன்னிபெசன்ட்டும் அமர்ந்திருந்தனர்.

 

சர்வமத மகாசபையின் நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ மதப்பிரார்த்தனையுடன் தொடங்கின. இசை, விழா, உரைகள் என்று ஆரவாரமாக மகா சபை ஆரம்பித்தது. முதல் நாள் தங்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ள பல்வேறு மதப் பிரதிநிதிகளை அவையினருக்கு அறிமுகம் செய்து, அவர்களுக்கு  வரவேற்புரை வாசிக்கப் பட்டது. தொடர்ந்து பிரதிநிதிகளின் நன்றி நவிலல்.

சுவாமிஜி நடப்பவைகளை மௌனமாகப் பார்த்துக் கொண்டு தனக்குள் ஆழ்ந்திருந்தார். அவர் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன போலும். பலமுறை அவரது பெயர் அழைக்கப்பட்டும் அப்புறம் அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். மாலை வேளையும் வந்துவிட்டது. கடைசியில் எழுந்தார். ஒரு நிமிடம் கலைமகளை மனதிற்குள் வழிபட்டார்.

‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே’

என்று தன் (பிற்காலத்தில் வரலாற்றில் மிகப் பிரபலமாகப் போகும்) உரையை துவங்கினார். அடுத்த கணம் ஏதோ மந்திரச் சொற்களைக் கேட்டது போல அவையினர் எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்தனர்.

தனது நிலை பற்றி சுவாமிஜியே கூறுகிறார்: ‘என் இதயம் படபடத்தது. நாக்கு உலர்ந்து போயிற்று; உடல் நடுங்கியது. இவை காரணமாகவே காலையில் பேசவில்லை. எனக்கு முன் பேசியவர்கள் தங்கள் உரைகளை முன்னமேயே தயாரித்துக் கொண்டு வந்தனர். நான் இதுபோன்ற எந்தவித ஆயத்தமும் செய்து கொண்டு வரவில்லை. சர்வமத மகாசபை அமைப்புக் குழுவின் தலைவர் ஜான் ஹென்றி பரோஸ் என்னை அறிமுகம் செய்துவைத்தார். கலைமகளை வணங்கிவிட்டு மேடைக்கு வந்தேன்.

‘இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்குப் பதிலளிக்க இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின் தாய் மதத்தின் பெயரால், கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்’ என்று ஆரம்பித்தார் சுவாமிஜி.

மிகச் சிறிய உரை என்றாலும் எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்தது சுவாமிஜியின் பேச்சு திறன். அந்த மேடையில் பேசிய அனைவருக்கும் நம் மதப்பிரிவை சார்ந்தவர், மிகவும் பிரபலமானவர், ஏற்கனவே அறிமுகமானவர் என்கிற பல்வேறு காரணங்களால் அவையினரிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது.

ஆனால் சுவாமிஜிக்குக் கிடைத்த வரவேற்பு அவரது ஆன்மீக ஆற்றலுக்கு கிடைத்த வரவேற்பு. தனது மனம், தனது சிந்தனை எல்லாவற்றையும் தியான பயிற்சி மூலம் ஓர் உயர்ந்த நிலைக்குச் எடுத்து சென்று அதனால் கிடைத்த  தூய வாழ்க்கையின் மாபெரும் ஆற்றல் இது. தூய்மையிலிருந்தும் மௌனத்திலிருந்தும் வந்த ஆற்றல் மிகுந்த சொற்கள்தான் அவையினரையும், அமெரிக்காவையும், உலகம் முழுவதையும் ஈர்த்தது. உலக வரலாற்றில் அழியாத பெருமையை தேடித் தந்தது.

 

இந்தியாவைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் மேலைநாடுகளுக்கு சுவாமிஜி கூறிய அற்புத விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 12

$
0
0

 

சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை கீழை நாடுகளின் மதங்களைப் பற்றிய எண்ணங்களை வெகுவாக மாற்றியது. மாயமந்திரம், சித்துவேலைகளே கீழை நாடுகளின் மதங்கள் என்ற வாதத்தைத் தகர்த்து அவை மகோன்னதமானவை என்று மேலைநாடுகளுக்குப் புரிய வைத்தது.

‘இந்து மதம் மனிதர்களைப் பாவிகளே என்று அழைக்க மறுக்கிறது. நாம் எல்லோரும் இறைவனின் குழந்தைகள்; பூரணமானவர்கள்; வையத்துள் வாழும் தெய்வங்கள்; அப்படியிருக்கையில் மனிதர்களை பாவிகள் என்று சொல்வது மனித இயல்புக்கே அழிக்க முடியாத கறை. மனித இனம் தன்னுள் இருக்கும் தெய்வீகத் தன்மையை உணர உதவி செய்வதை தன் முதல் நோக்கமாகக் கொண்டது இந்து மதம்’ என்று சொல்லி மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டத்தையும், இந்து மதத்தைப் பற்றிய கண்ணோட்டத்தையும் மாற்றினார்.

‘கிறிஸ்தவ மதக் கொள்கைகளை பின்பற்றும் நாடுகள் செல்வம் மிகுந்த, ஆற்றல் வாய்ந்த நாடுகள். மிகவும் பழமையானதும், சிறந்ததுமான இந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியா ஏன் ஏழ்மையில் வாடுகிறது?’ இந்தக் கேள்வி சுவாமிஜியிடம் பலமுறை கேட்கப்பட்டது. அவர் சொன்ன பதில்:

‘ஐரோப்பாவின் செல்வம் சக மனிதர்களுடன் போரிட்டு, அவர்களைக் கொன்று அதனால் வந்தது. இத்தகைய செல்வத்தை  இந்து விரும்புவதில்லை. இங்கிலாந்து நாட்டவர்களிடமிருந்து நாட்டை ஆள்வது பற்றி அறிய விரும்புகிறோம். விஞ்ஞானம், விவசாயம் போன்றவற்றின் நேர்த்தியை அமெரிக்கா எங்களுக்குக் கற்றுத் தரட்டும். ஆனால் ஆன்மீகத்தை நாங்கள் உலகிற்குக் கற்றுத் தருவோம்’.

இப்படிப்பட்ட உரைகள் மூலம் உலகிற்கு மட்டுமல்ல. இந்தியாவிற்கே இந்தியாவைப் பற்றி அறிய வைத்தார் சுவாமிஜி. சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இன்னும் நிறைய கற்க வேண்டும் நாம்.

‘வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் நான் என் தாய்க்குக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்கிறார் சுவாமிஜி. அவரது தந்தை விசுவநாத தத்தர். தாய் புவனேசுவரி தேவி. பெற்றோர்கள் அவருக்கு இட்ட பெயர் நரேந்திரன்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்களே, அதே போலத் தான் நரேந்திரனின் இளமைப் பருவமும் அமைந்திருந்தது.

ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு தாய்பாலுடன் நல்ல பண்புகளையும், நல்ல லட்சியங்களையும் ஊட்டவேண்டும். இந்தியக் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களையும் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமும் சிறுவயதிலேயே சொல்லிக் கொடுத்தார் புவனேசுவரி தேவி. தனது பாட்டியிடமிருந்தும் பல்வேறு பாகவதக் கதைகளை கேட்டு வளர்ந்தார் நரேந்திரன்.

எத்தனை புத்தகங்கள் படித்தாலும் ஒரு குழந்தை தன் பெற்றோரிடம் கற்கும் கல்வியே அவனது வாழ்க்கையை வளப்படுத்தும். நரேனும் தன் பெற்றோரிடமிருந்து வாழ்க்கையின் அடிப்படை பாடங்களை கற்றார். நல்லொழுக்கம், விடாமுயற்சி, இறை நம்பிக்கை போன்றவற்றை தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்டார்.

‘எப்போதும் தூயவனாக இரு. உன் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதுடன், பிறரது சுயமரியாதையையும் மதிக்கக் கற்றுக்கொள். சமநிலை தவறாதவனாக, எந்த சூழ்நிலையிலும் சமநிலை குலையாமல் பார்த்துக்கொள். மென்மையானவனாக இரு. அதேசமயம் தேவைப்பட்டால் உன் இதயத்தை இரும்பாக மாற்றிக் கொள்ளவும் தயங்காதே. உன் செயல்கள் நியாயமாக இருக்குமானால் நீ எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். நியாயமானதை செய்ய தயங்காதே.’ தாயின் இந்த வார்த்தைகள் பல இக்கட்டான சமயங்களில் நரேனுக்கு சரியான முடிவு எடுக்க வழி காட்டியிருக்கின்றன.

 

நரேனின் தந்தை பணிவுடன் கூடிய சுயமரியாதையை அவர் நெஞ்சில் விதித்தார். குழந்தைகள் தவறு செய்யும்போது எல்லா தந்தையரும் செய்வதுபோல அவர் ஆத்திரப்படவோ, அடிக்கவோ மாட்டார். குழந்தைகளை கண்டபடி திட்டுவதும், வசைச்சொற்களை பேசுவதும், அடிப்பதும் குழந்தைகளைத் திருத்தாது என்று அவர் உறுதியாக நம்பினார்.

 

ஒருமுறை நரேன் தனது தாயை கெட்டவார்த்தைகளால் திட்டிய போது அவனது தவறைச் சுட்டிக் காட்ட அவர் நரேன் தன் நண்பர்களை சந்திக்கும் அறையின் வாசலில், ‘இன்று நரேன் தன் அன்னையை இன்ன வார்த்தைகளால் திட்டினான்’ என்று எழுதி வைத்துவிட்டார். ஒவ்வொருமுறை தன் நண்பர்கள் அந்த அறைக்கு வரும்போதும் நரேன் கூனிக் குறுகினார். அதன்பிறகு அவர் அந்த வார்த்தைகளை தவறியும் பயன்படுத்தவில்லை.

 

‘எதைக்கண்டும் ஆச்சரியப்படதே, இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற உணர்வுடன் முன்னேறிப் போக வேண்டும்’ என்ற தந்தையின் வாக்கு நரேனுக்கு வழிகாட்டியாக இருந்தது. நன்நெறிகளைத் தவிர தந்தையிடம் நரேன் நன்றாக சமையல் செய்யவும், பாரம்பரிய சங்கீதத்தையும் கற்றுக் கொண்டார். பலவிதமான உணவுவகைகளையும் மிகவும் சுவைபடச் சமைப்பார் நரேன். இசை என்பது அவரது இரத்தத்திலேயே கலந்த ஒன்றாக இருந்தது. இசைக்கருவிகள் வாசிக்கவும் கற்றார்.

 

நல்ல கல்வி, ஆரோக்கியமான உடல், வளமான வாழ்க்கைத்தரம் இவற்றை குழந்தைகளுக்கு அளித்தால் அவர்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று உறுதியாக நம்பினார் விசுவநாத தத்தர். ஆழ்ந்த அறிவும், மதி நுட்பமும் படைத்தவர் புவனேசுவரி தேவி. அவர்களுக்குப் பிறந்த மகன் உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்ததில் வியப்பென்ன?

 

சுவாமி விவேகானந்தருக்கும் நமது தொடருக்கும் என்ன சம்மந்தம் என்று இத்தொடரைப் படிப்பவர்களுக்கு சந்தேகம் வரலாம். இந்தியாவின் அடையாளங்களுள் மிக முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். ஆன்மீகத்தின் தலைநகரம் என்ற அடையாளம் அவராலேயே இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என்று எல்லோருக்கும் அவரது செய்தி காத்திருக்கிறது.

 

‘எழுமின், விழிமின், குறி சேரும் வரை நில்லாது செல்மின்’ இந்த வார்த்தைகள் எல்லோருக்கும் பொருந்தும் அல்லவா?

 

 


இந்த வருடப் புத்தகம்

$
0
0

joan of arc book

இந்த வருடம் எனது மூன்றாவது புத்தகம் வெளியாகி இருக்கிறது.

‘ஜோன் ஆப் ஆர்க்’ என்ற பிரான்ஸ் நாட்டு வீர மங்கையின் வரலாற்றினை எழுதியிருக்கிறேன். இந்தப் பெண்ணைப் பற்றி பள்ளிகூடப் பாடப்புத்தகங்களில் படித்தது தான்.

இரண்டு வருடங்களுக்கு முன் கிழக்குப் பதிப்பகம் ஆசிரியர்  திரு மருதன் இந்தப் புத்தகம் எழுதுகிறீர்களா என்று கேட்டபோது என் அக்கா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாள். எழுதும் மனநிலையில் நான் இல்லை என்று சொல்லிவிட்டேன். நான்தான் எழுத வேண்டும் என்று அவர் எனக்காகக் காத்திருந்தார்.

எழுத ஆரம்பித்தபோதும் வீட்டில் நிறைய பிரச்னைகள். கணவரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்தது. எல்லாத் தடைகளையும் மீறி இந்தப் புத்தகத்தை எழுதி முடித்தது மிகப்பெரிய சாதனையாக இன்று எனக்குத் தோன்றுகிறது. பொறுமையாக எனக்காகக் காத்திருந்த திரு மருதன் அவர்களுக்கு என் நன்றி.

புத்தக அறிமுகத்திற்கு திரு மருதன் எழுதிய முன்னுரை:

ஜோன் ஆஃப் ஆர்க் – ரஞ்சனி நாராயணன்

‘நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவள். நான் இதுவரை போர்க்களத்தில் கால்களைப் பதித்ததில்லை. என் கரம் இதுவரை வாளைத் தீண்டியதில்லை. எளிமையான, விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவள் நான். இருந்தும் இங்கிலாந்தை முறியடித்து பிரான்ஸை விடுவிக்கும் பெரும் பணியை கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். என் தாய்நாட்டின் விடுதலைக்காக என் உயிரைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என் தலைமையை ஏற்க பிரான்ஸ் தயாராக இருக்கிறதா?’

ஒரு பதினேழு வயது சிறுமியிடம் ராணுவத்தையும் அதிகாரத்தையும் அளிக்க பிரான்ஸ் தயாராக இல்லை. போர்க்களத்தில் பெண்களுக்கு என்ன வேலை? அதுவும் ஒரு சிறுமிக்கு? கடவுள் என்னிடம் பேசினார்; படைகளுக்குத் தலைமை தாங்கச் சொன்னார் என்று சொல்லி முன்பின் அறிமுகமில்லாத, குழந்தைத்தன்மை மாறாத ஒரு பெண் திடீரென்று வந்து அறிவித்தால் எப்படி நம்புவது?

இங்கிலாந்து போன்ற ஒரு பலமிக்க எதிரியைச் சமாளிக்கும் பொறுப்பை ஜோனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் பின்னால் அரசரும் படை வீரர்களும் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கவேண்டுமா? இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என்ன?

இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து பிரெஞ்சு நகரங்களை ஒரே ஆண்டில் மளமளவென்று ஜோன் விடுவித்துக் காட்டியபோது கடவுளையும் ஜோனையும் அருகருகில் வைத்துப் போற்றியது பிரான்ஸ். ஒரு பெண் நம்மை எதிர்த்துப் போரிட்டுவருவதா என்னும் இங்கிலாந்தின் அலட்சியத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்தார் ஜோன். அசாத்தியமான மனிதர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை ஜோன் ஆஃப் ஆர்க் திட்டவட்டமாக நிரூபித்தபோது உலகம் அவரைக் கட்டுக்கடங்காத வியப்புடன் பார்த்தது. ஆனால் அப்போது ஜோன் உயிருடன் இல்லை.

இது ஜோனின் கதை. வரலாற்றை மாற்றியமைத்த ஓர் அசைக்கமுடியாத சக்தியின் கதையும்கூட.

==

கிழக்கு பதிப்பகம்
ப 200, விலை ரூ.225

 

வாங்கிப்படித்து விட்டு கருத்துக்களைப் பதியுமாறு எல்லோரையும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 13  

$
0
0

 

குழந்தை என்பது நமக்குக் கடவுள் கொடுக்கும் பரிசு. அதை பத்திரமாகப் பாதுகாத்து நன்றாக வளரும்படி செய்ய வேண்டியது நமது கடமை. குழந்தையின் மேல் ஆழ்ந்த பாசம், அன்பு கொண்டிருந்தாலும் சிலசமயங்களில் பெற்றோர்கள் இந்தக் கடமையிலிருந்து நழுவி விடுகிறார்கள். தங்களது அலுவலக வேலையில் மும்முரமாக இருப்பதால் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகிறது. விளைவு குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பதேயில்லை. ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது எப்படி? ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். யாருமே பூரணமான (Perfect) பெற்றோர் ஆக இருக்க முடியாது. இருக்கவும் வேண்டாம்.

நல்ல பெற்றோர் ஆக இருப்பது எப்படி? சில விஷயங்களைத் தவிர்த்து விடுங்கள்.

குழந்தைகளைப் பார்த்து சத்தம் போடாதீர்கள்

சில சமயம் குழந்தைகள் நம் சொல்லுக்குக் கட்டுப்படாமல் போகும்போது குழந்தைகளைப் பார்த்து சத்தம் போடுகிறோம். நாம் நமது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் இது என்பதைத் தவிர இதனால் எந்தப் பலனும் இல்லை. ‘இவங்க எப்பவும் இப்படித்தான் சத்தம் போடுவாங்க, இதைப் பெரிதாக எடுத்துக்க வேணாம்’ என்று குழந்தைகள் உங்கள் கத்தலுக்குப் பழகி விடுவார்கள்.

நச்சரித்தல்

நச்சரிக்கும் பெற்றோர்களை குழந்தைகள் விரும்புவதில்லை

‘இதைச் செய்தாயா? அதைச் செய்தாயா?’ என்று நச்சரித்துக் கொண்டே இருந்தால். ‘கத்தலு’க்குக் கிடைக்கும் மரியாதைதான் இதற்கும் கிடைக்கும்.

நீளமாகப் பேசுவது – அறிவுரை வழங்குவது.

இவை இரண்டுமே ஒருவழி பேச்சு. அதாவது நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருப்பீர்கள். உங்கள் குழந்தைகளிடமிருந்து எந்தவித மறுவினையும் கிடைக்காது. நீங்கள் எப்போது முடிப்பீர்கள் என்று உங்கள் குழந்தைகள் காத்திருப்பார்கள். நீங்கள் சொல்வது எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்!

குழந்தையை சிறுமைப்படுத்துவது:

‘உன்னால் என்ன முடியும்? எதற்கும் லாயக்கில்லாதவன்’ ‘தண்டச்சோறு’ ‘புத்தியில்லாதவன்’ என்பது போன்ற சொற்களை பெற்றோரின் வாய்மூலம் கேட்கும் குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக, தாழ்வு மனப்பான்மையுடன் வளருவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை இப்படிச் சிறுமை படுத்தாதீர்கள்.

குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தல்

ஒரு குழந்தையை அடித்துத் திருத்துவது என்பது மிகவும் மோசமான விஷயம். அடிப்பது மூலம் குழந்தை திருந்தவும் திருந்தாது என்பதுடன் முரட்டுத்தனம் இன்னும் அதிகமாகும். பிரச்னை என்ன என்பதை குழந்தையுடன் பேசி அவனுக்குப் புரிய வையுங்கள். எங்கே தவறு என்பதை நிதானமாகச் சொல்லுங்கள்.

பிற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அப்படித்தான் அதன் நடவடிக்கைகளும் அமையும். மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு திறமை உங்கள் குழந்தையிடம் இல்லை என்று நினைப்பதற்கு முன், அவர்களிடம் இல்லாத ஒரு திறமை உங்கள் குழந்தையிடம் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையிடம் அதைப் பற்றிப் பேசி அந்தத் திறமையை வளர்க்க உதவுங்கள்.

குற்ற உணர்வில் குழந்தையை தவிக்க விடாதீர்கள்.

குழந்தை செய்யும் தவறுகளை பெரிதாக்காதீர்கள். திரும்பத்திரும்ப அவற்றைச் சொல்லிச்சொல்லி குழந்தை ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டது போல உணரச் செய்யாதீர்கள். நாளடைவில் குழந்தை மனஅழுத்தத்திற்கு ஆளாகும்.

குழந்தையை குழந்தையாக நடத்துங்கள்.

ஏராளமான எதிர்பார்ப்புகளை அவர்கள் தலைமேல் சுமத்த வேண்டாம். அவர்களுக்கு தேவையான இடைவெளியைக் கொடுங்கள். முடிவுகளை அவர்களே எடுக்கட்டும்.

உதாரணப் பெற்றோர்களாக இருக்க முயற்சியுங்கள்.

உங்கள் குழந்தைகள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அவற்றையெல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். உங்களைப் பார்த்துதான் அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள். உங்களையும் அறியாமல் நீங்கள் செய்யும் சில செயல்களை அவர்களும் செய்யும் போது உங்களுக்குக் கோபம் வரலாம். அதனால் கூடுமானவரை நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, குழந்தையை ‘அடுத்த அறைக்குப் போய்ப்படி’ என்று சொல்லாதீர்கள். உங்கள் குழந்தையின் நன்மைக்காக தொலைக்காட்சி பார்ப்பதை உங்களால் நிறுத்த முடியாதா? வெறும் சாப்பாடு போட்டு துணிமணி வாங்கிக்கொடுத்து பள்ளிக்கு அனுப்புவது மட்டுமல்ல பெற்றோரின் கடமை. அவனை நல்ல ஒரு மாணவனாக உருவாக்குவதும் உங்கள் பொறுப்புகளில் ஒன்றுதான். நீங்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள். உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகளும் கற்றுக் கொள்ளுவார்கள்.

குழந்தை எதிரில் மற்றவரின் குறைகளை சொல்லிக்காட்டி சிரிக்காதீர்கள்.

குழந்தையின் எதிரில் சண்டை போடாதீர்கள்.

விருந்தாளிகளின் எதிரில் குழையக் குழையப் பேசுவதும், அவர்கள் சென்றபின் அவர்களைத் தூற்றுவதும் செய்யாதீர்கள். உங்களது இரட்டை வேடம் குழந்தைகளைக் குழப்பும். நாளடைவில் குழந்தைகளின் மதிப்பில் நீங்கள் தரம் தாழ்ந்து போவீர்கள்.

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவர். இதில் தவறேதும் இல்லை. அதற்காக வீண் ஆடம்பரம், ஜம்பம் செய்யாதீர்கள். உங்கள் பணவரவு செலவு இவை உங்கள் குழந்தைகளுக்கும் தெரிந்திருக்கட்டும். அதற்காக அவர்களுக்கு ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு சொல்லவேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்களுக்காக நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் உங்கள் கடுமையான உழைப்பிலிருந்து வருவது என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தில் சிலவற்றிற்கு ‘நோ’ சொல்லவும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுடன் ஒரு நல்ல நண்பனாக இருக்க முயலுங்கள். நிறைவான பெற்றோர்களின் லட்சணங்கள் இவை தான்.

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 14  

$
0
0

 

 

சுயசார்புடைய, முடிவுகளைத் தாங்களே எடுக்கக்கூடிய, பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய, தன்னம்பிக்கை நிறைந்த குழந்தைகளாக தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டுமென்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள். வேகமாக மாறிவரும் உலகில் குழந்தைக்குத் தேவையான திறமைகளை எப்படி வளர்ப்பது?

சிறுவயதிலேயே ஆரம்பித்து நிதானமாக அவர்களை பழக்குவது தான் ஒரே வழி.

  • வீட்டிற்குள் சுதந்தரப் பறவையாக உலவ விடுங்கள்:

சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போதே குழந்தைகளை வீட்டுக்குள்ளே சுதந்தரமாகச் சுற்ற விடுங்கள். குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பு செலுத்துவது, அவர்களது வயதிற்குத் தகுந்த, பளிச்சென்ற வண்ணங்களில் கிடைக்கும் விளையாட்டு சாமான்களால் வீட்டை நிறைப்பது இவையெல்லாம் குழந்தைகளை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகச் செய்யும். அதே நேரத்தில் தவழும் குழந்தையாக இருந்தாலும், நடக்கத் துவங்கிய குழந்தையாக இருந்தாலும் அவர்களை வீட்டினுள்ளே அவர்கள் போக்கில் உலவ விடுங்கள். அம்மா அப்பாவின் மேற்பார்வையில் வீட்டில் இருக்கும் எல்லா அறைகளுக்கும் போய் அங்கிருக்கும் சாமான்களைத் தொட்டுப் பார்க்கட்டும். இதற்கும் முன்னால் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி: உங்கள் வீட்டை குழந்தைக்கு பாதுகாப்பு நிறைந்ததாகச் செய்வது. வீட்டை தூசு தும்பு இல்லாமல் சுத்தமாக வையுங்கள். குழந்தையின் கைபட்டு சாமான்கள் எதுவும் குழந்தையின் மேல் விழாமல் இருக்க வேண்டும். அறைக்கதவு அடித்துக் கொள்ளாமல் நிலையாக இருக்க வேண்டும். எதன் மேலும் இடித்துக் கொள்ளாமல் குழந்தை வீட்டில் வளைய வரவேண்டும். தரையில் நீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மிதியடிகள், செருப்புகள் குழந்தையின் கைக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் குழந்தை தடுக்கி விழுந்து விடுமோ, அடிபட்டுக் கொண்டுவிடுமோ என்கிற கவலை இல்லாமல் வீட்டைச் சுற்றி வரும் அளவிற்கு வீடு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

  • பொறுப்புக்களை கொடுத்துப் பழக்குங்கள்:

விளையாடிய பின் விளையாட்டுச் சாமான்களை அதனதன் இடத்தில் வைக்கப் பழக்குங்கள். முதலில் நீங்கள் எடுத்து வையுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையையும் எடுத்து வைக்கச் சொல்லுங்கள். அதாவது நீங்கள் 90% செய்யும் வேலையில் 10% குழந்தை செய்யட்டும். மெதுமெதுவே உங்கள் பங்கினைக் குறைத்துக் கொண்டு குழந்தையின் பொறுப்பில் விட்டுவிடுங்கள். சற்று வளர்ந்தவுடன் தன்னுடைய புத்தகங்களை அடுக்குவது, தன்னுடைய துணிமணிகளை மடித்து அலமாரியில் வைப்பது, தானாகவே குளித்துவிட்டு வருவது, அறையில் விளக்கு, மின்விசிறி இவைகளை அணைப்பது என்று பொறுப்புகளைக் கொடுங்கள். பெரிய குழந்தைகளை முதல் நாள் இரவே பள்ளிச் சீருடைகளை எடுத்து வைத்துக் கொள்வது, டைம்-டேபிள் பார்த்து அடுத்தநாளுக்குத் தேவையான புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொள்வது, தண்ணீர் பாட்டிலில் நீர் பிடித்து வைத்துக் கொள்வது, காலணிகளை பாலிஷ் போட்டு வைப்பது, சாக்ஸ்களை எடுத்து வைத்துக் கொள்வது போன்ற வேலைகளைச் செய்யப் பழக்குங்கள். மிக முக்கியமான பொறுப்பு வீட்டுப் பாடங்களை பாக்கியில்லாமல் முடிப்பது, தேர்வுகளுக்கான பாடங்களை தானாகவே படிப்பது இவைதான். மதிப்பெண்கள் அவர்களது உழைப்பைப் பொறுத்தது என்று தெளிவுபடுத்தி விடுங்கள்.

 

  • கனவுகள் நிறைவேற உதவுங்கள்

 

சிறுவயதில் நிறைவேறாத உங்கள் ஆசைகளை அளவுகோலாக வைத்துக் கொண்டு குழந்தைகளை உருவாக்க முயலாதீர்கள். இப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருக்கும் உங்கள் சின்னஞ்சிறு குழந்தைக்கு களிமண் வைத்துக்கொண்டு விளையாடப் பிடிக்குமா விளையாடட்டும். உங்கள் பத்து வயது சுட்டிப் பெண்ணுக்கு மெஹந்தி போடப் பிடிக்குமா போடட்டும். அவளது கைத்திறனையும், கற்பனைத் திறனையும் மனதாரப் பாராட்டுங்கள். கல்லூரியில் இருக்கும் உங்கள் பதின்ம வயது மகனுக்குக் கவிதை எழுதப் பிடிக்குமா? உற்சாகப்படுத்துங்கள். அவன் எழுதும் கவிதைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள். உங்கள் கனவுகளையே அவர்களும் காண வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். புதிய கனவுகளை, பெரிய கனவுகளை அவர்கள் காணட்டும். அவர்களது கனவுகளை நிறைவேற்ற உங்கள் ஒத்துழைப்பைக் கொடுங்கள்.

 

  • வீட்டு வேலைகளையும் செய்யப் பழக்குங்கள்:

‘குழந்தைகள் படிக்கட்டும். வீட்டு வேலைகளை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்’ என்று சில தாய்மார்கள் சொல்லுகிறார்கள். இது தவறு. வீட்டு வேலைகளையும் அவர்களிடத்தில் ஒப்படையுங்கள். மிகச் சிறப்பாகச் செய்து காண்பிப்பார்கள். வேலைக்குப் போகும் தாய்மார்களுக்கு இத்தகைய குழந்தைகள் ஒரு வரப்பிரசாதம். மாலையில் நீங்கள் வீட்டிற்கு வந்து சேருவதற்கு முன், வீட்டில் விளக்குகளைப் போட்டு, உலர்ந்த துணிகளை மடித்து வைத்து, வீட்டை சுத்தம் செய்து, பள்ளிக்குப் போட்டுக் கொண்டு போன சீருடைகளை களைந்துவிட்டு வேறு உடை அணிந்து, தலை வாரி, முகம் கழுவி என்று எல்லா வேலைகளையும் செய்யப் பழக்குங்கள். தம்பி, தங்கைகள் இருந்தால் அவர்களுக்கும் உடைமாற்றி, முகம் கழுவி விட்டு, வேறு உடை அணிவித்து அம்மா வீட்டிற்குள் வரும்போது உற்சாகமாக அம்மாவை வரவேற்கலாம். அலுவலகப் பணியினால் அலுத்துப் போய்வரும் அம்மாவிற்கு இவை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். இல்லத்தரசிகளும் இதுபோன்ற வேலைகளை குழந்தைகளைச் செய்யச் சொல்லலாம். வீட்டு வேலையைச் செய்வது – அதுவும் நம் வீட்டு வேலையைச் செய்வது எந்தவிதத்திலும் தவறு இல்லை.

 

  • தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம்.

வெற்றியைப் போலவே தோல்விகளும் வாழ்க்கையில் இன்றியமையாதவை என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுக்கும் தோல்வியை எப்படி ஏற்றுக்கொள்வது என்று சொல்லிக் கொடுங்கள். தோல்வியிலிருந்து பாடம் கற்கலாம் என்று சொல்லிக் கொடுங்கள். தோல்வியில் துவளாமல் எழுந்து நிற்பதுதான் புத்திசாலித்தனம் என்று புரிய வையுங்கள். தோல்வி வாழ்வின் முடிவு அல்ல.

மேலும் பேசுவோம்……

 

 

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர்15 

$
0
0

எனது பேஸ்புக் தோழி திருமதி காயத்ரி ஹரிஹரன் தனது அனுபவத்தைச் சொல்லுகிறார், கேளுங்கள்:

இன்று எனக்கு ஒரு ஆனந்தமான வேடிக்கையான அனுபவம். எனது உறவினர் குழந்தை படிக்கும் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதால் நீங்கள் வந்து குழந்தைகளுக்கு கிருஷ்ணர் கதை சொல்ல முடியுமா என்று கேட்டார்.  சரி என்று ஒப்புக்கொண்டேன். என் கணவர் உடனேயே ஐபேடில் மஹாபாரதம் டௌன்லோட் செய்து கொடுத்து, பரீட்சை எழுதும் குழந்தைக்கு உதவியாக முன்னேற்பாடு செய்யும் தந்தை போல, இதைப்பார்த்து படித்துக்கொள்..கதை சொல்ல சௌகரியமாக இருக்கும் என்றார். நான் அதெல்லாம் வேண்டாம். அங்கு போய் எப்படி சொல்ல வருகிறதோ அப்படி சொல்லிக் கொள்ளுகிறேன் என்று சொல்லிவிட்டேன்.  ஸ்கூலில் மாக்கோலத்தில் கிருஷ்ணர் காலடியெல்லாம் போட்டிருந்தார்கள். நான் எல்கேஜி அறையில் போய் “ஹாய் குழந்தைகளா! உங்களுக்கு கிருஷ்ணர் கதை சொல்ல வந்திருக்கேன்” என்று சொல்லி நான் எடுத்துப் போயிருந்த தொட்டில் கிருஷ்ணரை தாலாட்டச் சொல்லி, கதையை ஆரம்பித்தேன். அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போயிற்று. கிருஷ்ணரை கோகுலத்தில் வசுதேவர் விட்டுவிட்டு, அங்கு பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்தார். அந்தக்குழந்தை கம்சன் கையில் எடுத்தவுடன் பறந்து மேலே போனாள் என்று சொன்னவுடன், ஒரு பையன் என்னிடம் எனக்கும் பறக்க முடியும் என்றான். அவ்வளவுதான்…எனக்கும் முடியும், எனக்கும் முடியும் என்று கையை விரித்து குழந்தைகள் ரூம் முழுக்க “பறக்க” ஆரம்பித்து விட்டார்கள்! கதையும் அத்தோடு முடிந்தது!!’

இதுதான் ‘குழந்தைகள் உலகம்’. இந்த உலகத்தில் நுழைவதற்கு ஒரே தேவை: குழந்தைகளின் வயதிற்கு நீங்களும் கீழே இறங்கி வரவேண்டும். அவர்களின் கண்கள் மூலம் உலகத்தைப் பார்க்க வேண்டும். எந்த வயதுக் குழந்தையாக இருந்தாலும் அந்த வயதுக்குரிய அறிவு, பொருள்களை பற்றிய புரிதல் நிச்சயம் இருக்கும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால் குழந்தைகள் ஒரு காலி பாத்திரம் என்று நினைத்துக்கொண்டு நம்மிடம் இருக்கும் அறிவு என்னும் நீரூற்று மூலம் அதை உடனடியாக நிரப்ப முயலுகிறோம்.

இதோ ஒரு அப்பாவின் அனுபவம்

ஜன்னல் வழியே பாத்துக் கொண்டிருந்த என் பிள்ளை  கேட்டான்: இந்த மரம் எப்படி தன்  கிளைகளை இது போல முன்னும் பின்னும் இப்படி அசைக்கிறது?’

நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் சொன்னேன்: ‘மரம் அசைக்கவில்லை, மகனே! காற்று…….’ என்று ஆரம்பித்தவன் சற்று நிதானித்தேன்.  புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மகனின் அருகில் போய் உட்கார்ந்து நானும் அந்த மரத்தைப் பார்த்தேன். அறையின் உள்ளேயோ, ஜன்னலின் வழியாகவோ காற்றை உணர முடியவில்லை. காற்றின் ஒலியையும் கேட்க முடியவில்லை. ஒரு அறைக்குள் உட்கார்ந்து கொண்டு காற்றுதான் மரத்தின்  கிளைகளை அசைக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? அது மரத்தின் தன்னிச்சையான செயலாக ஏன் இருக்கக்கூடாது? மரத்தின் அசைவைப் பார்த்துக் கொண்டே என்னை மறந்து நின்றேன்.

‘நீ சொல்வது இப்போ எனக்குப் புரிகிறது, மகனே! மரத்தின் அசைவு மிக அழகாக இருக்கிறது’.

‘மரம் நடனம் ஆடுகிறதோ?’

‘ஏன் மரம் நடனம் ஆட வேண்டும்?’

‘இப்போது வசந்த காலம். அதனால் இருக்கலாம். குளிர் நன்றாகக் குறைந்திருக்கிறது. அதனால் இருக்கலாம்’

‘இருக்கலாம்’

நாங்கள் இருவரும் மரத்தின் அசைவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு லயம் இருப்பது போல தோன்றியது. முதலில் பலமாக, மிகுந்த வலிமையுடன்; பிறகு மெதுவாக, மென்மையாக, திடீரென்று மிக பலமாக, சிலசமயம் மூர்க்கத்தனமாக மரம் அசைந்து கொண்டிருந்தது. நான் இதுவரை பார்க்காத ஒன்றாக இந்தக் காட்சி இருந்தது.

‘அப்பா, மரத்திற்கு உயிர் உண்டா?’

‘உண்டு’

‘அவைகளுக்கு உணர்ச்சிகள் உண்டா?’

‘எனக்குத் தெரியவில்லை, ஏன் கேட்கிறாய்?’

‘இந்த மரம் சந்தோஷமாக இருப்பது போலத் தெரிகிறது. ஒரு மரம் சந்தோஷமாகவும், வருத்தமாகவும் இருக்க முடியுமா?’

‘என்ன சொல்ல விரும்புகிறாய்?’

‘குளிர்காலத்தில் கிளைகள் எல்லாம் மொட்டையாக இலைகள் உதிர்ந்து போய், தலை கவிழுந்து கொண்டு தனியாக பாவமாக இருக்கும். இப்போது பாருங்கள் கிளைகள் முழுவதும் புதிய இலைகள், சூரிய ஒளியில் மின்னுகின்றன; பறவைகள் அங்கே வசிக்கின்றன. இப்போது மரமும் சந்தோஷமாக இருக்கிறது’.

நாங்கள் இருவரும் மெளனமாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம். மற்ற மரங்களும் இப்போது காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மரமும் ஒவ்வொருவிதமாக எதையோ சொல்ல விரும்புவது போல இருந்தன.

‘அதோ அங்கிருக்கும் ஒரு பெரிய மரத்தைப் பார். அது என்ன சொல்ல நினைக்கிறது?’

‘அது மிகவும் பழைய மரம். நிறைய வயதாகியிருக்கும். நிறைய தடவை வசந்த காலத்தையும், வெயில் காலத்தையும் பார்த்திருக்கும். அதனால் அது அதிகம் எதுவும் சொல்லவில்லை’

கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு என் மகன் சொன்னான்: ‘நடனம் ஆட வேண்டுமென்றால் இசை வேண்டும். ஒருவேளை காற்று அந்த மரத்திற்கு மட்டும் கேட்கும் படியாக இசையை கொண்டு வருகிறதோ, என்னவோ?’

என் மகன் சொன்னதை நானும் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

என் மகன் மெதுவாகச் சொன்னான்: ‘அப்பா, எனக்கு என் வகுப்பு ஆசிரியரை அவ்வளவாகப் பிடிக்கவில்லை’

இப்போது புரிகிறதா குழந்தைகளின் உலகின் நாம் நுழைவது எவ்வளவு முக்கியம் என்று?

https://www.chabad.org/library/article_cdo/aid/2706/jewish/My-Childs-Window.htm

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 16

$
0
0

 

 

சென்ற வாரம் நான் எழுதியிருந்த அப்பாவின் அனுபவம் என்பதை எழுதியவர் ஜே லிட்வின் (Jay Litvin). Chabad.org என்ற இணையதளத்தில் நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

https://www.chabad.org/theJewishWoman/article_cdo/aid/2366419/jewish/Dont-Forget.htm

 

தனக்குச் சமமாகப் பேசும் தந்தையிடம் குழந்தை தனது பள்ளியில் தான் சந்திக்கும் பிரச்னை பற்றியும் பேசுகிறது. பள்ளியில் என்ன நடக்கிறது என்பதை தங்கள் பிள்ளைகள் தங்களிடம் சொல்வதேயில்லை என்று பல பெற்றோர்கள் வருத்தப்பட்டுக் கொள்ளுகிறார்கள். இளம் வயதிலேயே குழந்தைகளுடன் ஒரு நெருக்கத்தை வளர்த்துக் கொண்டுவிட்டால் பள்ளியில் நடக்கும் எல்லா விஷயங்களையும் உங்களிடம் வந்து சொல்லுவார்கள்.

குழந்தையுடன் பேசுவது என்பதில் தான் பாதிக்கு மேற்பட்ட பெற்றோர்கள் தவறி விடுகிறார்கள். பள்ளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்துவிட்டு தேர்வு வரும் சமயத்தில்  விழித்துக் கொள்வார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை. தினமும் குழந்தையுடன் பேசி பள்ளியில் என்ன நடந்தது என்பதைக் கேட்டு அறிந்து கொள்வது பெற்றோர்களின் தலையாய கடமை. அவ்வப்போது பள்ளிக்குச் சென்று குழந்தைகளின் படிப்பு, வகுப்பில் அவர்களின் பங்களிப்பு, மற்ற மாணவர்களுடன் பழகும் விதம்  முதலியவற்றை ஆசிரியர்களிடமிருந்து தெரிந்து கொண்டு வாருங்கள்.

குழந்தைகளுடன் பேசும்போது சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

நமது மூளை நாம் பேசும், கேட்கும் வார்த்தைகளை வியப்பான முறையில் பதிவு செய்துகொள்ளுகிறது. பேசுவதற்கு முன் சற்று யோசித்துவிட்டுப் பேசுவது நமக்கும், நாம் மிகவும் விரும்பும் நம் குழந்தைகளுக்கும் நன்மையை விளைவிக்கும். பேசுமுன் யோசி என்றே நம் முன்னோர்களும் சொல்லியிருக்கிறார்கள். நாம் கூறும் வார்த்தைகள் எப்படி செயல்முறைப் படுத்தப் படுகின்றன, எப்படி ஏற்றுக்கொள்ளப் படுகின்றன எப்படி நாம் சொல்லும் சொற்களை அதிக பலன் கொடுக்கும்படியாகச் சொல்லுவது என்றெல்லாம் புரிந்துகொண்டால் வார்த்தைகளையும் தேர்ந்தெடுப்பது சுலபமாகும். நமது குறிக்கோளும் நிறைவேறும்.

சுருக்கமாகப் பேசுதல் மூளைக்கு சட்டென்று புரிகிறது: நீங்கள் நீளமாக அறிவுரை என்று கூறுவது அதற்குப் புரிவதில்லை. சின்னச்சின்ன உறுதியான கட்டளைகள் மனதில் அழுத்தமாகப் படிகின்றன.

  • ‘நீ நன்றாகப் படித்தால் தான் நாளை பெரிய மனிதனாகலாம். வாழ்வில் உயரலாம்’ என்றெல்லாம் நீளமாகச் சொல்லுவதற்கு பதில் ‘நன்றாகப்படி’ என்று மாணவப் பருவத்தில் இருக்கும் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
  • இப்போது நடக்க வேண்டியதைச் சொல்லுங்கள். பழைய விஷயங்களை போட்டுக் கிளறாதீர்கள். ‘வரப்போகிற தேர்விற்கு ஆயத்தம் செய்து கொள்’ என்பது நல்ல பேச்சு. ‘சென்றமுறை நீ சரியாகப் படிக்கவில்லை. மதிப்பெண்கள் குறைந்துவிட்டன. இந்த முறையாவது சரியாக தயார் செய்துகொள்ள வேண்டாமா?’ இது அனாவசியப் பேச்சு.
  • எதிர்மறைச் சொற்களை நமது மூளை ஏற்பதில்லை. அதேபோல ‘இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே’ என்பனவற்றையும் விரும்புவதில்லை. ‘புத்தகத்தை மறந்துவிட்டுப் போய்விடாதே!’ என்று சொல்லுவதைவிட ‘ஞாபகமாகப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போ!’ என்பது மூளையில் நல்ல வார்த்தைகளாகப் பதியும்.
  • குழந்தைகள் உங்களிடம் பேசும்போது உங்களது மறுவினையும் சரியான முறையில் அமைய வேண்டும். ‘இன்றைக்கு கஷ்டமான வீட்டுப்பாடம்!’ என்று அவர்கள் சொல்லும்போது ‘நீ ரொம்ப சுலபமா பண்ணிடுவே பாரு, நானும் உதவி பண்ணுகிறேன், சரியா’ என்று சொல்லுங்கள். ‘எப்படித்தான் முடிக்கப் போகிறாயோ?’ என்று நீங்கள் சொன்னால் குழந்தைகளின் மனதில் ‘முடிக்க முடியாது’ என்று பதிந்துவிடும்.
  • நமது மூளை நாம் பேசும் வார்த்தைகளில் இருந்து ‘லேபிள்’ களைத் தயார் செய்துவிடும். உதாரணமாக உங்கள் பிள்ளைகள் இருவரும் காலையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஒரு பிள்ளையிடம் நீங்கள் சொல்லுகிறீர்கள்: ‘உன் அக்காதானே அவள்? அவளிடம் நீ இத்தனை மோசமாக நடந்து கொள்ளலாமா?’ என்று. கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தையின் மனதில் நான் மோசமானவன் என்ற லேபிள் விழுந்துவிடும். இப்படிச் சொல்லுவதற்கு பதில் ‘உன் அக்கா அவள். அவளிடம் நீ நல்லபடியாக நடந்து கொள்’ என்று சொல்லுங்கள். நான் நல்லவன் என்ற லேபிள் குழந்தையின் மனதில் பதிந்து நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • குழந்தைகள் உற்சாக மிகுதியில் சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது ‘ஏன் இப்படிச் சத்தம் போடுகிறீர்கள்? குரலை அடக்குங்கள்’ என்று சொல்வதை விட ‘தயவுசெய்து மென்மையாகப் பேசுங்கள்’ என்று சொல்லுவது உங்கள் மனதையும் அமைதிப் படுத்தும்.

 

குழந்தைகள் வளர வளர அவர்களது விருப்பங்களும், தேர்வுகளும் மாறுகின்றன. ஆனால் உங்கள் அணுகுமுறை உறுதியானதாக, அன்பு நிறைந்ததாக இருக்கட்டும். அவர்களது உணவுப் பழக்கம், தூக்கம், விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்களது தூக்கம், உணவுப் பழக்கம் ஆகியவையும் மிகவும் முக்கியம். உங்களைப் பார்த்துத்தான் குழந்தைகள் வளருகிறார்கள். அவர்கள் எதிரில் ஏதாவது ஒரு உணவுப் பொருள் அல்லது காய்கறி, பழம் பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்னால், குழந்தைகளும் அதையே சொல்லுவார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும் என்பதை முதலிலேயே பழக்கி விடுங்கள்.

சிறு குழந்தைகளுக்கு தினமும் இரவில் புத்தகம் படித்துக் காண்பிப்பது பெற்றோர், குழந்தைகள் இடையே ஒரு நல்ல உறவை, நெருக்கத்தை  ஏற்படுத்தும். கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்க்க அனுமதியுங்கள். இவைகளுடன் நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும் நன்றாகக் குறைத்துக் கொள்ளுங்கள். இரவில் நன்றாகத் தூங்கி எழுந்திருக்கும் குழந்தைகள் பள்ளியில் மிகவும் கவனத்துடன் பாடங்களைக் கற்றுக் கொள்ளுவார்கள். அவர்களது படிக்கும் திறனும்,ஞாபகசக்தியும் உயரும்.

 

உணவுப் பழக்கம், தூக்கம், விளையாட்டு பற்றி தொடர்ந்து பேசுவோம்.

 

 

 

 

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 17

$
0
0

சத்தான உணவு, நல்ல தூக்கம், விளையாட்டு இவை மூன்றும் மாணவர்களுக்கு சரியான முறையில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கடமை. குப்பை உணவுகளை வாரம் ஒருமுறை என்று குறைத்து விடுங்கள். புதிதான காய்கறி, பழங்கள் இவை உணவில் தினமும் இருக்க வேண்டும். பள்ளிக்கு எடுத்துச் செல்லும் உணவில் அதிக மாற்றங்கள் செய்ய இயலாது. அதனால் அவர்கள் வீட்டில் சாப்பிடும்போது நிறைய காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொடுங்கள். அதுவும் மாலை வேளையில் பள்ளியிலிருந்து திரும்பும்போது அதிகப்பசியுடன் வருவார்கள். அப்போது நொறுக்குத்தீனி என்ற பெயரில் எண்ணையில் பொரித்ததைக் கொடுக்காமல் பழங்களை கொடுங்கள். பால் ஒரு பூர்த்தியான உணவு. தினமும் மூன்று வேளை பால் கொடுங்கள்.

 

பாதாம், பிஸ்தா போன்ற உலர்பழங்களை தவறாமல் கொடுங்கள். புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் வளரும் குழந்தைகளுக்கு அவசியம் தேவை. இவை விலை அதிகமானவை என்று சிலர் எண்ணக்கூடும். குப்பை உணவுகள், எண்ணையில் பொறித்தவைகளைக் கொடுப்பதற்கு பதில் இவைகளை வாங்கிக் கொடுப்பது நல்லது. நெய், வெண்ணை, தயிர் போன்ற பால் புரதங்களை தினமும் உணவில் இருக்கட்டும்.

 

  • பிள்ளைகளுக்கு விருப்பமானவற்றைச் செய்து கொடுங்கள். சமையல் வேலையில் அவர்களையும் ஈடுபடுத்துங்கள். இளம் பிள்ளைகளை நேரடியாக அடுப்பில் வேலை செய்ய விடா விட்டாலும் ‘நறுக்கிய அந்த தக்காளிகளை எடுத்துக் கொடு; உப்பு பாட்டிலை எடுத்துக் கொடு’ என்று உதவி செய்யச் சொல்லுங்கள். சமையல் அறையின் சுத்தம், காய்கறிகளின் சத்துக்கள் என்று பலவகையான விவரங்களை அப்போது அவர்களுடன் பேசுங்கள். உணவில் நீங்கள் என்னென்ன சேர்க்கிறீர்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கும்போது அவர்களுக்கு சாப்பாட்டின் மேல் ஒரு ஆசை உண்டாகும்.
  • சமையல் என்பது விளையாட்டல்ல என்பது புரியும்போது சமையலைக் குறை சொல்லாமல் சாப்பிடுவார்கள்.
  • உணவுப் பொருட்கள் வாங்கப் போகும்போது அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். அவற்றின் மேல் இருக்கும் லேபில்களைப் படிக்கச் சொல்லிக் கொடுங்கள்.
  • விலை, மற்றும் எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம், குறிப்பிட்ட உணவுப்பண்டத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது போன்றவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள இது உதவும்.
  • உணவை வீணாக்கக் கூடாது என்று இளம்வயதிலேயே சொல்லிக் கொடுங்கள்.
  • முளைகட்டிய பயறு வகைகளில் புரதம் அதிகம் இருக்கிறது; கால்சியம் நிறைந்த உணவுகளால் வலிமையான, பற்கள், எலும்புகளைப் பெறலாம் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். இதனால் அவர்களுக்கு உணவு பற்றிய புரிதல் ஏற்படும்.
  • சாப்பாட்டு நேரத்தில் தட்டுகளைக் கழுவி வைப்பது, நீர் எடுத்து வைப்பது, உணவுப் பண்டங்களை எடுத்துக் கொண்டு போய் மேசை மீது வைப்பது போன்றச் சின்னச்சின்னஉதவிகள் செய்யட்டும்.
  • மேசையைச் சுத்தம் செய்யும் வேலையையும் அவர்கள் செய்யட்டும்.
  • கையில் தட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தபடியே சாப்பிடுவது நல்லதல்ல. குடும்பம் முழுவதும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது.
  • சாப்பிடும் நேரம் எந்தவிதமான மின்னணு சாதனங்களும் கையில் இருக்கக் கூடாது. சாப்பிடும் சாப்பாட்டில் முழு கவனமும் இருக்க வேண்டும். அன்றைய நாள் எப்படி இருந்தது என்பதை அவரவர்கள் சொல்லலாம். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று திட்டம் போடலாம். அறிவுரை, வாதப்பிரதிவாதங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
  • ‘நீ சமத்தாக வீட்டுப்பாடம் செய்து முடித்தால், ஐஸ்க்ரீம் வாங்கித் தருகிறேன்’ என்று உணவுப் பண்டங்களை விலை பேசாதீர்கள், ப்ளீஸ்! இதுபோன்ற உணவுகளை அளவிற்கு மீறி குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதும் ஆபத்து. இந்தக் காலக் குழந்தைகளுக்கு உடற்பருமன் மிகப் பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

குழந்தைகள் தூங்கும் நேரமும் அவர்களது வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல மாறும். இரவு அதிக நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டி வரலாம். கடுமையான உழைப்பிற்குப் பின் ஓய்வும் அவசியம். பள்ளிப் பருவத்தில் தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. முதலிலிருந்தே இவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டு வருவது பெற்றோர்களின் கடமை. நல்ல தூக்கம் ஞாபகசக்தியை அதிகரிக்கிறது என்று பல ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

தூங்குவதற்கு முன் ஒருமணி முன்பாகவே தொலைக்காட்சி, அலைபேசி ஆகிய மின்னணு சாதனங்களை அணைத்து விடுவது கண்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். தூங்குவதற்கு முன் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை பிள்ளைகளிடத்தில் உருவாக்குங்கள். இயற்கை வெளிச்சத்தில் பிள்ளைகளை படிக்க வையுங்கள். மின்சாரப் பயன்பாடு குறைவதுடன், இளம் வயதிலேயே கண்ணாடி போடும் அவசியத்தைத் தவிர்க்கலாம்.

விளையாடுவதற்கு பிள்ளைகளை அனுமதிப்பது மிகவும் முக்கியம். குழு விளையாட்டுக்கள் இளம் பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களை கற்பிக்கின்றன.

  • குழுவினருடன் ஆடுவது பிற்காலத்தில் சமூகத்தில் கூட்டாக வாழுவதன் அவசியத்தையும், லவித மனிதர்களை எதிர்கொள்ளும் திறனையும் கொடுக்கிறது.
  • விட்டுக்கொடுப்பது, பகிர்ந்து கொள்ளுவது, கவனம் செலுத்துதல், குறியை அடைதல், நேரமேலாண்மை ஆகியவற்றைக் கற்கிறார்கள். இந்தப் பயிற்சிகள் அவர்களுக்குப் படிப்பதிலும் உதவுகின்றன.
  • வெற்றி தோல்விகள் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள் என்பதை விளையாட்டுக்கள் மூலம் புரிந்து கொள்ளுகிறார்கள்.
  • வெற்றிகளைவிட தோல்விகள் மாணவர்களின் மனஉறுதியை அதிகப்படுத்துகின்றன.
  • இளம்பருவத்தினருக்கு இருக்கும் அபரிமிதமான சக்தியை நல்லவழியில் செலவழிக்க விளையாட்டுக்கள் உதவுகின்றன.

 

படிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் உடல் ஆரோக்கியம். நல்ல உணவு, நல்ல தூக்கம், விளையாட்டு இவை உடல் ஆரோக்கியத்தைக் காக்க உதவும்.

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 18

$
0
0

 

 

 

பெற்றோர்களுக்கு ஓஷோ கூறும் அறிவுரைகள்: 3.11.2018

உங்கள் குழந்தையை நீங்கள் மனமார விரும்புகிறீர்கள் என்றால் அவர்கள் வலிமையானவர்களாக வளர உதவுங்கள். உடலாலும், உள்ளத்தாலும் வலிமையான குழந்தைகள் தாங்களாகவே இந்த உலகத்தை ஆராய விரும்புவார்கள். குழந்தையை, அதன் உணர்வுகளை மதியுங்கள். பெரியவர்களுக்கு மரியாதையை கொடுக்க வேண்டும் உண்மை. குழந்தைப்பருவம் பரிசுத்தமானது; கலப்படமில்லாதது. அதற்கு மரியாதை கொடுங்கள்.

 

வாழ்க்கையின் மூலத்திற்கு ஒரு குழந்தை மிகவும் நெருக்கமாக இருக்கிறது. வெற்றுத்தாள் போல ஒரு குழந்தை இந்த உலகத்திற்கு வருகிறது. எதற்காக அதன் மேல் உங்கள் ஆசைகளை, உங்கள் கதைகளை  எழுத அவசரப்படுகிறீர்கள்?

 

குழந்தைகள் சின்னஞ்சிறுசுகள். பக்குவப்படாத சிறிய விதை போன்றவர்கள். எதிர்காலத்தில் இப்படி உருவாகக் கூடும் என்ற ஒரு சாத்திய நிலையிலேயே இருப்பவர்கள். அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் அளவில்லாத அன்பையும் கொடுங்கள். சாதித்துக் காட்டுவார்கள். அவர்களது எதிர்காலத்தை பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுக்க முடியாது. உங்களது கடந்த காலத்தில் அவர்களை வாழ வைக்க நினைக்காதீர்கள். உங்களது பழைய நைந்து போன வாழ்க்கையை அவர்கள் மேல் சுமத்தாதீர்கள். அவர்களே தங்கள் வாழ்க்கையை எழுதிக்கொள்ளட்டும். அவர்களுக்கு திறந்தவெளியாக இருக்கும் ஒரு எதிர்காலத்தைக் காட்டுங்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் உண்மையில் விரும்பினால் அவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்.

 

அவர்கள் வலிமை பெற உதவுங்கள். அறியாதவற்றை அறிய உதவுங்கள். உங்கள் யோசனைகளை கொடுக்காதீர்கள். சின்னக் குழந்தைகளைப் பார்த்தால் அவர்களது பார்வையில் ஒரு தெளிவு இருக்கும். நீங்கள், கடந்து போன நாட்களைச் சேர்ந்தவர்கள். அவர்களோ நாளைய தினங்களை ஆளப் போகிறவர்கள். எத்தனை அன்பு செலுத்த முடியுமோ அத்தனை அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். நிச்சயமாக உங்கள் கடந்த காலத்தை அவர்களது எதிர்காலமாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைக்காதீர்கள்.

 

அவர்களுக்கு மனவலிமையைக் கொடுங்கள். உங்கள் தூய அன்பைக் கொடுங்கள். அவர்கள் தூர தூர பிரதேசங்களுக்குப் பயணம் செய்ய விரும்புவார்கள். அதற்கு வலிமை தேவை. உங்கள் குழந்தைகள் உங்களை விட்டு வெகு தூரம் சென்று ஒரு தனி மனிதனாக உருவாகும் போது மகிழ்ச்சி கொள்ளுங்கள். உங்களுக்குக் கீழ் படியும் ஒரு முட்டாளாக அவன் இல்லை என்று மகிழ்ச்சி அடையுங்கள். முட்டாள்கள் மட்டுமே அடிபணிந்து நிற்பார்கள்.

 

அவர்களுக்கென்று  ஒரு எதிர்காலம் இருக்கிறது. அவர்களது திறமைக்கேற்ப அவர்கள் வளரட்டும். உங்களுடைய நகலாக உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்திற்குத் தடை போடுங்கள். உங்கள் குழந்தைக்கென்று ஒரு அசல் முகம் இருக்கட்டும். அசல் முகத்திற்கு என்று ஒரு அழகு, தெய்வீகம், கவர்ச்சி இருக்கிறது. அதையெல்லாம் நகல் எடுக்க முடியாது. நீங்கள் ஒரு வில் என்றால் உங்கள் குழந்தைகள் அதிலிருந்து புறப்படும் அம்புகள். அந்த அம்புகள் இதுவரை காணாத, அறியாத நிலங்களுக்குச் செல்லட்டும். அதைத் தடுக்காதீர்கள்.

 

அறிவுத்திறன் என்பது பல புரட்சிகளைச் செய்யும். ஒரு புரட்சிக்காரனைப் பெற்றிருக்கிறோம் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். இதைப் பற்றி பெருமைப் படுங்கள். அதற்கு பதில் மக்கள் மனஅழுத்தம் கொள்ளுகிறார்கள். நீங்கள் ஒரு வில்லாளியின் கையில் வில்லாக இருக்கிறீர்கள். உங்களைப் பிடித்திருக்கும் வில்லாளிக்கு அவன் எய்தும் அம்புகளை மிகவும் பிடிக்கும். அந்த அம்புகள் பல காத தூரம் சென்று விழவேண்டும் என்று விரும்புவான். அதே சமயம் அவன் கையிலிருக்கும் அம்பு திடமாக இருக்க வேண்டும் என்றும் விழைவான். உங்கள் காலம் முடிந்துவிட்டது. புதிய அம்புகளுக்கு வழி விடுங்கள். அவைகளை வாழ்த்துங்கள். உங்கள் கட்டுப்பாட்டிலிருந்து குழந்தைகளை விடுவித்து அவர்கள் வாழ்க்கையை வாழவிடுங்கள்.

 

இந்தத் தொடரைப் படிக்கும் பெற்றோர்கள் ஓஷோவின் மேற்சொன்ன அறிவுரைகளையும் மனதில் நிறுத்திக்கொள்வது அவசியம்.

 

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளிடத்தில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். ‘ஊஹூம், நான் அப்படியெல்லாம் என் குழந்தைக்கு எந்தவித அழுத்தமும் கொடுப்பதில்லை’ என்று சொல்லும் பெற்றோருக்கும் கூட மனதின் அடிஆழத்தில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். எதிர்பார்ப்புகளை குழந்தைகளிடத்தில் சொல்லாவிட்டால் கூட அம்மா அல்லது அப்பாவின் மனதில் தோன்றும் எண்ணங்கள் குழந்தையின் மனதிற்குத் தெரிந்துவிடும். எண்ணங்களின் சக்தி இது என்று சொல்லலாம்.

 

நம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நமக்கு சில பயங்கள், சந்தேகங்கள் இருக்கும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்று நீங்கள் பயப்படுவது உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிந்தால் அவர்களும் எல்லாவற்றிற்கும் பயப்பட ஆரம்பிப்பார்கள். தேவையில்லாத  மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஆகவே எதிர்மறை எண்ணங்களை நேரான எண்ணங்களாக மாற்றிவிடுங்கள். உதாரணமாக பள்ளியிலிருந்து உங்கள் மகள் வரத் தாமதம் ஆகிறது என்றால் உடனே ஏதாவது விபத்து நேர்ந்திருக்குமோ, அவளை யாராவது ஏதாவது செய்திருப்பார்களோ என்றெல்லாம் எண்ணத் தொடங்காமல், போக்குவரத்து அதிகமிருக்கும் அதனால் தாமதம், அல்லது பள்ளியிலேயே சற்றுத் தாமதம் ஆகியிருக்கலாம் என்று எண்ணுங்கள். இப்படிப்பட்ட நேரான எண்ணங்களால் உங்களுக்கும் மனஅழுத்தம் அதிகமாகாமல் இருக்கும். உங்கள் மகளுக்கும் தாமதத்திற்கான காரணத்தைச் சொன்னால் வீட்டில் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கும்.

அனாவசியமான பயங்களைப் போலவே சந்தேகங்களையும் தவிர்த்து விடுங்கள். நம் குழந்தைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் எங்கே போவார்கள்? யாரிடம் தங்களது குறைகளைச் சொல்லிக் கொள்வார்கள்?

 

உடல்நலம் போலவே பிள்ளைகளுக்கு மனநலமும் முக்கியம். இரண்டையும் பேணிக் காப்பது பெற்றோர்களின் தலையாய கடமை.


பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 19

$
0
0

 

நாம் மிகவும் விரும்பும் நம் குழந்தைகளுக்கு உண்மையிலேயே நாம் அவர்களை விரும்பினால் – விரும்புவதாக நாம் உணர்ந்தால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று இது தான்: அவர்களுக்காக செலவழிக்கும் பணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும்; அவர்களுடன் செலவழிக்கும் நேரத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.

‘நீங்கள் சொல்வது இயலாத ஒன்று. பணத்தை அவர்களுக்காகத்தானே சம்பாதிக்கிறேன்? அவர்கள் தேவையை அந்தப் பணத்தைக் கொண்டுதானே பூர்த்தி செய்கிறேன்? நான் சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் அவர்கள் படக்கூடாது என்று தானே இப்படி நேரமேயில்லாமல் உழைத்து, கை நிறைய சம்பாதிக்கிறேன்? அலவலகத்தில் ஏற்படும் மன உளைச்சல்கள், வியாபார நிமித்தமாக நான் மேற்கொள்ளும் பயணங்கள், எனது தகுதியை தக்க வைத்துக் கொள்ள சமூகப்பணிகள் என்று எத்தனை வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது? எனது நேரம் இதற்கே சரியாகிவிடுகிறதே? நேரம் எங்கே இருக்கிறது குழந்தைகளுடன் செலவழிக்க? நீங்கள் அதை இரட்டிப்பாக்குங்கள் என்று வேறு சொல்லுகிறீர்களே!’ என்று சொல்லும் பெற்றோர்கள் நீங்கள் என்றால் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

உங்களது பணத்தால் செய்ய முடியாததை உங்கள் நேரத்தை உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதன் மூலம் செய்துவிடலாம் என்பதைப் புரிந்து கொண்டால் நான் சொல்வது நிச்சயம் இயலும்.

ஒரு கதை சொல்லுகிறேன். கேட்கிறீர்களா?

 

ஒரு கல்லூரி. தத்துவ வகுப்பு ஆரம்பமானது. பேராசிரியர் வகுப்பிற்குள் நுழையும் போதே தன் கைகளில் சில பொருட்களைக் கொண்டு வந்தார்.

 

மாணவர்களிடம் எதுவும் பேசாமல் முதலில் தான் கொண்டு வந்த பொருட்களிலிருந்து ஒரு பெரிய மயோனைஸ் ஜாடியை எடுத்து மேசைமேல் வைத்தார். தன்னிடமிருந்த கோல்ப் (golf) பந்துகளை ஜாடி நிரம்பும்வரை போட்டார்.  மாணவர்களை கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?”

 

“ஆம்” என்றனர் மாணவர்கள்.

 

அடுத்ததாக கூழாங்கற்கள் நிறைந்த ஒரு பெட்டியை திறந்து அவைகளை கோல்ப் பந்துகள் நிறைந்த ஜாடியில் கொட்டினார். ஜாடியை சற்றுக் குலுக்கினார்.  கூழாங்கற்கள் கோல்ப் பந்துகளின் நடுவில் இருந்த இடைவெளியில் போய் உட்கார்ந்து கொண்டன.

 

பேராசிரியர் மறுபடியும் கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?” மாணவர்கள் “ஆம்”  என்று தலை அசைத்தனர்.

 

பேராசிரியர் இப்போது ஒரு பெட்டி நிறைய மணலை எடுத்து ஜாடியினுள் கொட்டினார். ஜாடி முழுவதும் மணல் நிரம்பியது.

 

தனது கேள்வியை அவர் திரும்பக் கேட்க மாணவர்களும் ஒட்டுமொத்தமாக “ஆம்” என்றனர்.

 

பேராசிரியர் மேசையின் கீழிருந்து 2 கோப்பை காப்பியை எடுத்து ஜாடியில் ஊற்றினார். காப்பி மணலுடன் கலந்தது. மாணவர்கள் சிரித்தனர்.

 

பேராசிரியர் கூறினார்: “இந்த ஜாடி உங்கள் வாழ்க்கையைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். கோல்ப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பொருட்களான குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள், பிடித்தமான பொழுதுபோக்குகள் இவற்றைக் குறிக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் எதை இழந்தாலும் இவை உங்களுடன் இருப்பவை. இவைதான் உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்க உதவுபவை..”

 

சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்:

 

“கூழாங்கற்கள் உங்கள் வேலை, சொந்த வீடு, கார் போன்றவை. மணல் மற்ற சின்னச்சின்ன விஷயங்கள்”

 

“சிறிது யோசியுங்கள்: முதலில் ஜாடியினுள் மணலைப் போட்டிருந்தால் என்னவாயிருக்கும்? கூழாங்கற்களுக்கோ, கோல்ப் பந்துகளுக்கோ இடம் இருந்திருக்காது. நம் வாழ்க்கையும் அதேபோல் தான். உங்களிடம் இருக்கும் நேரம் முழுவதையும் சின்னச்சின்ன விஷயங்களில் செலவிட்டால், பெரிய விஷயங்களுக்கு நேரம் இருக்காது.”

 

“………அதனால் முக்கியமான விஷயங்களுக்கு முதலில் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்; ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரம்  ஒதுக்குங்கள்.”

 

“உங்கள் துணைவி/துணைவரை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். வீட்டைச் சுத்தம் செய்யவும், சின்னச்சின்ன வேலைகள் செய்யவும் கட்டாயம் நேரம் இருக்கும். முதலில் முக்கியமானவற்றிற்கு நேரம் செலவிடுங்கள். எது முக்கியம், எதை முதலில் செய்வது என்று முடிவு செய்யுங்கள்.  மற்றவை மணலை போன்றவை.”

 

மாணவர்கள் அவர் கூறியதை மனதில் வாங்கிக் கொண்டு சிந்தனை வயப் பட்டிருந்த போது ஒரு மாணவி கையைத் தூக்கினாள். “ஒரு கேள்வி..” எழுந்து நின்று கேட்டாள்: “காப்பி எதைக் குறிக்கிறது?”

 

பேராசிரியர் புன்னகையுடன் கூறினார்: “யாரும் கேட்கவில்லையே என்று நினைத்தேன். நீ கேட்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது….”

 

“உங்கள் வாழ்க்கை எத்தனைதான் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தாலும், நேரத்தைச் சற்று சரியாகச் செலவழித்தால், ஒரு நண்பருடன் ஒரு கோப்பை காப்பி குடிக்க கட்டாயம் நேரம் இருக்கும் என்பதைத்தான்!’

 

கதை நன்றாக இருக்கிறது ஆனால் எப்படி நேரத்தை திட்டமிடுவது என்கிறீர்களா? நேர மேலாண்மை வல்லுனர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை

அவசரம் – முக்கியம்

 

அவசரம் – முக்கியமில்லை

 

அவசரமில்லை – முக்கியம்

 

அவசரமில்லை – முக்கியமில்லை

என்று பிரித்துக் கொள்ளுங்கள்.

குடும்பம், குழந்தைகள் முக்கியம்/அவசரம் என்பதால் அதிக நேரத்தை அவர்களுடன் செலவழியுங்கள். நண்பர்களை திருப்திப்படுத்துவது அவசரமில்லை/முக்கியமில்லை என்பதால் அதைக் கடைசியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் தங்களது மரணப்படுக்கையில் கவலைப்படுவதில் முக்கியமான ஒன்று எது தெரியுமா? ‘எனது குடும்பத்துடன், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லையே’ என்பது தான். அலுவலகத்தில் இன்னும் நிறைய நேரம் செலவழித்திருக்கலாம் என்று யாரும் கவலைப் படுவதில்லை.

 

உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் பணம் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை உங்கள் நேரம் கொடுக்கும் என்பதை மறந்திடாதீர்கள், பெற்றோர்களே!

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 20

$
0
0

 

குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என்ற தணியாத வேட்கையினால் பெற்றோர்கள் செய்யும் செலவுகள் பணம் என்பது ஏதோ மரத்தில் காய்ப்பது போன்ற உணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தி விடுகிறது. அதுமட்டுமல்ல; எத்தனை வாங்கிக்கொடுத்தலும் திருப்தி அடைவதில்லை. சிறுவயது முதலே தங்களை விட தங்கள் குழந்தைக்கு மிகச்சிறந்தவற்றை கிடைக்கச்செய்ய வேண்டும் என்கிற எண்ணம் குழந்தைகளின் மனதில் அதிருப்தி என்னும் விதையை விதைத்து விடுகிறது என்கிறார் சைக்காலஜிஸ்ட் டாக்டர் சப்னா ஷர்மா. இதன் காரணமாக அவர்கள் சோம்பேறிகளாகவும், எதையும் எதிர்கொள்ளப் பயப்படுபவர்களாகவும், அதேசமயத்தில் பேராசையும், அக்கறையின்மையும் கொண்டவர்களாகவும் உருவாகுகிறார்கள்.  இதை Parent Induced Wastefulness (PIW) என்று குறிப்பிடுகிறார் டாக்டர் சப்னா.

 

இதற்கு என்ன தீர்வு?

நீங்கள் உங்கள் குழந்தையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறீர்கள் என்பது சரி. அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரியாமல் வளர்க்காதீர்கள். இப்படி வளர்ப்பதால் ஒரு காலகட்டத்தில் வெளி உலகை சந்திக்க அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்காலத்தை சந்திக்கத் தயாராக இல்லை. எல்லாவற்றிலிருந்தும் ஓடி ஒளிய விரும்புகிறார்கள். இந்த உலகத்தில் தான் அவர்கள் வாழ வேண்டும். எப்போதும் உங்கள் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் நீங்கள்  பரிகாரம் தேட முடியாது.

 

அதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளை உண்மையில் விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்ய வேண்டும். தடைகளை எதிர்கொள்ளத் தயார் செய்யுங்கள்.அவர்களுடன் பேசுங்கள். உங்கள் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு என்று உறுதி கூறுங்கள். அதேசமயம் படிப்பு, நண்பர்கள், வெளி உலகில் ஏற்படும் ஏமாற்றங்கள், கேலிகள் எல்லாவற்றையும் அவர்கள் தான் கையாள வேண்டும் என்பதையும் கறாராகச் சொல்லுங்கள்.

பணம் என்பது எல்லாவற்றையும் கொடுக்காது. உங்களிடமிருந்து ‘இல்லை’ என்ற வார்த்தையை உங்கள் குழந்தைகள் அதிக அளவில் கேட்கட்டும். அதுதான் அவர்களை எதிர்காலத்திற்குத் தயார் செய்யும்.

 

வெளி உலகில் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள் பல. அவைகளை எதிர்கொள்ள அவர்களைத் தயார் செய்வது பெற்றோரின் முதல் கடமை. இப்போது இன்னொரு வகையான சவாலையும் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்ற பெயரில் தொலைக்காட்சிகள் செய்யும் அக்கிரமம் கொஞ்சநஞ்சமல்ல. இசைப்போட்டி, நடனப் போட்டி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். சின்னக் குழந்தைகளை அவர்களது வயதுக்கு மீறிய பாடல்களைப் பாட வைப்பது; அசிங்கமான வரிகள் கொண்ட பாடலுக்கு இளம் குழந்தைகளை ஆட வைப்பது. ‘இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாடி இருக்கலாம்; ஆடி இருக்கலாம்’ என்று நடுவர்கள் என்ற பெயரில் உட்கார்ந்திருக்கும் வயதானவர்கள் கருத்துத் தெரிவிப்பது. பெண் குழந்தைகளுக்கு நாகரீகம் என்ற பெயரில் கன்னாபின்னாவென்று உடை அணிவிப்பது இவை எல்லாமே நிச்சயம் கண்டிக்கப்பட விஷயங்கள்.  இவற்றையெல்லாம் ரசித்துப் பார்க்கும் வெட்டிக் கூட்டம் ஒன்று. இவர்களில் யாருக்குமே குழந்தைகளைப் பற்றிய அக்கறை இல்லை. நாளைய தலைமுறை இவர்கள் என்ற சமூக உணர்வும் இல்லை.

 

பெற்றோர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். சின்னஞ்சிறு வயதில் இப்படிப்பட்ட புகழ் தேவையா? புகழ் என்பது போதைபொருள். உங்கள் குழந்தை பிறவி மேதையாக இருக்கலாம். அந்த மேதைத்தனத்தை பாதுகாத்து, தேவையான பயிற்சிகள் கொடுத்து வளர்த்து வாருங்கள். அதை வைத்துப் பணம் பண்ண எண்ணாதீர்கள். தானாகப் பழுக்க வேண்டிய பழத்தை தடி கொண்டு அடித்துப் பழுக்க வைப்பது தான் இந்தப் போட்டிகளில் உங்கள் குழந்தைகளைக் கலந்து கொள்ள வைப்பது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

ரியாலிட்டி ஷோ என்று சொல்லி கண்களில் நீரை வரவழைப்பது கலப்படம் இல்லாத வியாபாரத்தனம் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜூரிகள் என்று பத்து பேர்கள் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்களில் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? எத்தனை பேர்கள் புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள்? இதுவரை பாடி பரிசு வாங்கிய  சிறுவர்கள் எல்லாம் எங்கே? எத்தனை பேர்களுக்கு திரைத் துறையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது?

 

மாணவப்பருவத்தில் இது போன்ற அலைக்கழிப்புகள் தேவையில்லை. அவர்களது முழு கவனமும் படிப்பதில் இருக்கட்டும். மாணவப் பருவம் முடிந்த பின் பாடுவதில் கவனம் செலுத்தலாம். மாணவப் பருவத்தைத் தாண்டிவிட்டால் படிப்பு ஏறாது. படிக்கும் வயதில் படிக்க வேண்டும்.

 

ஐந்து வயது ஆறுவயதுக் குழந்தைகள் எல்லாம் இப்படிப்பட்ட போட்டிகளில் கலந்து கொள்வதைப் பார்க்கும்போது இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பதைபதைப்பு எனக்கு ஏற்படும். உங்கள் குழந்தையின் திறமையை வைத்து தொலைக்காட்சிகள் பணம் செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் தாற்காலிகமான புகழ். நிலைத்து நிற்காது. இந்த சீசனில் உங்கள் குழந்தையை நினைவு வைத்துக் கொள்பவர்கள் அடுத்த சீசனில் வேறு ஒரு குழந்தையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

படிப்பிற்கு மட்டுமல்ல; பாட்டுப்பாடவும் உழைப்பு வேண்டும். எதுவுமே நினைத்த மாத்திரத்தில் கிடைத்து விடாது. கிடைக்கக் கூடாது. பிறகு அதன் மேல் மரியாதை இருக்காது. கடின உழைப்பு ஒன்று மட்டுமே மாணவர்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கும்.

 

பெற்றோர்களும் கொஞ்சம் பொறுமை காக்கலாம். பாட்டு என்பதை பொழுது போக்காக வைத்துக் கொள்ளட்டும். குழந்தைகள் பட்டதாரி ஆனவுடன் உங்களது பாடும்/ஆடும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 21

$
0
0

 

 

 

‘அனன்யா எப்போ ஸ்கூல் போவாள்?’

கேட்டது மூன்றாம் வகுப்புப் படிக்கும் சித்தார்த் – அனந்யாவின் அண்ணா. அனன்யாவிற்கு இப்போதுதான் ஒரு வயது நிரம்பி இருக்கிறது. ‘அடுத்த வருடம் ப்ளே ஸ்கூல் போவாள்’ என்றேன் நான். ‘பாவம்! அப்புறம் அவளுக்கு சாட் டேஸ் (sad days) தான்!’ என்றான் சித்தார்த். நான் உடனே சிரித்தாலும் அவன் சொன்னது என்னை மிகவும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்..

 

பல குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் என்பது பிடிக்காத ஒரு இடமாகவே இருக்கிறது. இந்த நிலைக்கு காரணம் யார்? பள்ளிக்குச் செல்லவே ஆரம்பிக்காத குழந்தையைப் பார்த்து, ‘ரொம்ப விஷமம் பண்ணுகிறாயா? இரு இன்னும் கொஞ்ச நாட்களில் உன்னை ஸ்கூலில் போடுகிறேன். அங்கே டீச்சர் உன்னை நல்லா அடி அடின்னு அடிச்சு…..உன் வாலை ஓட்ட நறுக்கிடுவாங்க……!’ என்று சொல்லும் பெற்றோர் முதல் காரணம். அடுத்து பள்ளிக்குச் செல்லும் குழந்தையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ‘சொன்ன பேச்சைக் கேட்கிறாயா? உங்க டீச்சர் கிட்ட சொல்லவா?’ என்று எல்லாவற்றிற்கும் டீச்சரைக் காட்டி பயமுறுத்தும் பெற்றோர். பள்ளிக்கூடம் என்றாலே பயங்கரமான ஒரு இடம், ஆசிரியர் என்பவர் ஒரு அரக்கர் என்ற பிம்பத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்கி விடுகிறார்கள்.

 

இந்த பயமுறுத்தல்களை மீறி பள்ளிக்கு வந்தால் ஆசிரியர் சுவாரஸ்யமே இல்லாமல் பாடங்களை நடத்துகிறார். முதலில் குழந்தைகளை ஓரிடத்தில் உட்கார வைப்பது என்பது மிகவும் கடினமான வேலை. குழந்தைகள் என்றால் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். அவர்களை ஒரு அறையில் உட்கார வைத்து படி, படி என்றால் என்ன செய்வார்கள்?

 

உடல் உழைப்பு அல்லது மூளைக்கு வேலை இரண்டு மட்டுமே அவர்களை அமைதிப்படுத்தும். அவர்களுக்கு இருக்கும் அபரிமிதமான சக்தியை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும்.

 

பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்கள்? அவர்களும் அவர்களுக்குரிய கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

திரு பில் கேட்ஸ் ஒரு பள்ளிக்கூடத்தில் பேசியபோது சொன்னவை மிகவும் சிந்திக்க வைக்கிறது. பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியாத பதினோரு விஷயங்கள் பற்றிப் பேசியிருக்கிறார். எப்போதுமே நல்லதையே காட்டும், சரியான விஷயங்களையே கற்பிக்கும் கல்வியால் இந்தத் தலைமுறை வாழ்வியலின் சில கடினமான உண்மைகளை உணருவதில்லை. நிறைய படிப்புப் படித்திருந்தும் நிஜ வாழ்க்கையில் பலர் தோல்வி அடைய இவை காரணம் என்கிறார் திரு. பில் கேட்ஸ்.

மாணவர்களே!

  • வாழ்க்கை நியாயமானதாக இல்லை என்று உங்களுக்குத் தோன்றும். உண்மை. அதை பழக்கி கொள்ளுங்கள்.
  • உங்கள் சுயமரியாதை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். உங்களைப் பற்றி நீங்கள் பெருமைப்படுவதற்கு முன் நீங்கள் ஏதாவது சாதித்திருக்க வேண்டும் என்று இந்த உலகம் எதிர்பார்க்கிறது.
  • பள்ளியிலிருந்து வெளியே வந்தவுடனேயே உங்களால் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியாது. நீங்கள் ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவராக, ஒரு கார், ஒரு கைபேசி வைத்திருப்பவராக ஆக முடியாது. இவற்றையெல்லாம் நீங்கள் தான் சம்பாதிக்க வேண்டும்.
  • உங்கள் ஆசிரியர் மிகவும் கடுமையானவராக இருக்கிறார் என்று தோன்றினால் உங்களுக்கு ஒரு மேலதிகாரி வரும் வரை காத்திருங்கள்.
  • உங்களுடைய தவறுகளுக்கு உங்கள் பெற்றோர் பொறுப்பாக முடியாது. தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். தவறுகளுக்கு வருந்துவதை விட அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் பெற்றோர் இவ்வளவு ‘போர்’ அடிப்பவர்களாக இருக்கவில்லை. அப்படி அவர்கள் ஆனதற்கு நீங்கள் தான் காரணம். உங்களுக்காக செலவு செய்வது, உங்கள் துணிமணிகளை சுத்தம் செய்வது, நீங்கள் உங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதை கேட்பது என்று இதையெல்லாம் செய்து செய்து இப்படி ஆகிவிட்டார்கள். அப்பா அம்மாவின் தப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்கு முன் உங்கள் துணி அலமாரியை சுத்தம் செய்யுங்கள்.
  • பள்ளியில் வெற்றியாளர் தோல்வியாளர் என்ற பாகுபாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. பல பள்ளிகளில் ‘பெயில்’ என்பதே இல்லை என்று சொல்லி எத்தனை முறை வேண்டுமானாலும் பரீட்சை எழுதலாம் என்று சொல்லுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் இப்படி எதுவுமே நடக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
  • வாழ்க்கை செமெஸ்டர்களால் ஆனது இல்லை. இங்கு கோடை விடுமுறை கிடையாது. உங்களுக்கு உதவ யாருக்கும் இங்கு ஆர்வம் இருக்காது. நீங்களே தான் உங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • தொலைக்காட்சி நிஜ வாழ்க்கை இல்லை. நிஜ வாழ்க்கையில் மக்கள் காபிக்கடையில் காப்பியைக் குடித்துவிட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
  • உங்கள் கீழ் வேலை செய்பவர்களிடம் மரியாதை வையுங்கள். சொல்லமுடியாது நாளை நீங்கள் அவர்கள் ஒருவரின் கீழ் வேலை செய்ய வேண்டி வரலாம்.
  • நான் படித்த படிப்பிற்கு இந்த வேலையா என்று பொங்காதீர்கள். வரும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்.

தைத்த்ரிய உபநிஷதம் மாணவர்களுக்குக் கூறும் நல்லுரைகள்:

உண்மையான நிலைப்பாடு உடையவராக இருங்கள். உண்மை மட்டுமே  உங்களைப் பாதுகாக்கும். பொய் உங்களைக் காட்டிக் கொடுக்கும் எத்தனை நீங்கள் பாதுகாத்தாலும். உண்மை உங்களுக்கு பலத்தைக் கொடுக்கும்; வாய்ப்புக்களைப் பெருக்கும். பொய் உங்களை பலவீனப் படுத்தும். வாய்ப்புக்களைத் தட்டிப் பறிக்கும்.

நியாயமும், கருணையும் மனதில் நிலைத்து இருக்கட்டும்.

உங்களை வளர்த்த இந்த சமுதாயத்திற்கு நல்லதைச் செய்யுங்கள். சமுதாயத்தில் பிரச்னை வருவது பொல்லாதவர்களின் செயல்பாட்டினால் அல்ல; நல்லவர்கள் செயல்படாமல் இருப்பதால்.

மேலும் பேசுவோம்……

 

நேர வங்கி

$
0
0

Published in valam September 2018 issue

 
எனது மாணவர்கள் நேரமேயில்லை என்று சொல்லும்போது நான் கேட்பேன்: ‘யாருக்கெல்லாம் 25 மணி நேரம் வேண்டும் ஒரு நாளைக்கு?’ என்று. முக்கால்வாசிப் பேர் கையைத் தூக்குவார்கள் அடுத்து நான் போடப்போகும் மொக்கை ஜோக்கை அறியாமல். அவர்களது ஆவலைத் தூண்ட இன்னொரு கேள்வி கேட்பேன்: ‘நீங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள்?’ சிலருக்கு இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் தெரிந்துவிடும் நான் என்ன சொல்லப்போகிறேன் என்று. ‘ப்ஸ்…’ என்று ‘உச்’ கொட்டிவிட்டு என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். ‘நீங்கள் எப்போதும் எழுந்திருக்கும் நேரத்தைவிட ஒரு மணிநேரம் முன்னால் எழுந்திருங்கள்’ என்று நான் விடாமல் சொல்லுவேன்.

என்னதான் சொன்னாலும், கடந்து போன காலங்கள் போனதுதான். அவற்றை மீட்டுக் கொண்டுவர முடியாது என்பதெல்லாம் நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் நாம் செலவழித்த நேரங்களை பிற்காலத்தில் நமக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான். எப்படி என்று மேலே படியுங்கள்.

கிறிஸ்டினாவிற்கு 67 வயது. பணிஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி ஆசிரியை. தனியொருத்தியாக வாழ்ந்து வரும் இவர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். இவர் இருப்பது சுவிட்சர்லாந்து நாட்டில். இந்த நாட்டின் ஓய்வூதியம் மிக அதிகம். வயதான காலத்தில் சாப்பாடிற்கோ, மருத்துவமனை செலவுகளுக்கோ கவலைப்பட வேண்டாம். அப்படியிருக்கும் போது, இந்த வயதில் நிம்மதியாக ஓய்வு எடுக்காமல் வேலைக்குச் செல்ல வேண்டுமா? அவர் சொல்லுகிறார்: ‘நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை. எனது நேரத்தை சேமிக்கிறேன். எனக்குத் தேவையான போது அதை வங்கியிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்வேன்’ என்கிறார். நேரத்தை சேமிக்க முடியுமா? முடியும் என்றால் எதற்காக நேரத்தைச் சேமிக்க வேண்டும்? சேமித்து என்ன செய்வது?

சுவிட்சர்லாந்துநாட்டில் இருக்கும் செயின்ட் காலன் (St. Gallen) நகரம் தான் முதன் முதலில் இந்த நேர வங்கி என்னும் கருத்துப்படிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மிகவும் புதுமையான இந்த நேர வங்கி எப்படிச் செயல்படுகிறது? பணிஓய்வு பெற்றவர்கள் தங்களை விட வயதானவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மேலே நாம் பார்த்த கிறிஸ்டீனா வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என்று 87 வயதான ஒரு வயோதிகரைப் பார்த்துக் கொள்ளுகிறார். பார்த்துக் கொள்வது என்றால் அவருக்காக கடைகண்ணிக்குப் போய்வருவது; அவரது வீட்டை சுத்தப்படுத்துவது; புத்தகம் படித்துக் காட்டுவது; மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, அவருடன் அரட்டை அடிப்பது, அவருக்கு சமைத்துப் போடுவது போன்றவை. இதனால் கிறிஸ்டீனாவிற்கு என்ன நன்மை? இதற்காக அவருக்குப் பணம் கிடைக்காது. அதற்கு பதிலாக இந்த நான்கு மணி நேரம் அவரது ‘நேர வங்கி’ கணக்கில் சேர்த்து வைக்கப்படுகிறது. அவருக்கு உடம்பு முடியாமல் போகும்போது வேறு ஒருவரின் உதவியை அவர் நாடலாம். அவர் சேமித்து வைத்திருக்கும் நேரங்களில் இன்னொரு ஆர்வலர் வந்து இவருக்கு உதவுவார். அந்த ஆர்வலரின் வங்கிக் கணக்கில் இந்த நேரம் சேமித்து வைக்கப்படும். எதற்காக இப்படி என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லையா?

சுவிட்சர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1960 ஆம் ஆண்டு பத்து குடிமகன்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல் இருந்தார். இப்போது ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆறு பேர்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல். இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது போலத் தோன்றினாலும், தினசரி வேலைகளுக்கே அடுத்தவர் உதவியை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தனை வருடங்களில் ஓய்வூதியத் தொகையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருக்கும் நாலு பேர்களின் பங்களிப்பு பணிஓய்வு பெற்ற ஒருவரின் ஓய்வூதியத் தொகையாக மாறுகிறது. இப்போது இருக்கும் நிலையில் இன்னும் நாற்பது ஆண்டுகளில் இரண்டு பேர்கள் இந்தப் பங்களிப்பை செய்ய வேண்டியிருக்கும்.

வயதானவர்களின் – குறிப்பாக சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களின் – எண்ணிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. செயின்ட் காலன் நகரம் சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஜெர்மனி எல்லையின் அருகில் அமைந்திருக்கிறது. இங்கு ஏற்கனவே பல தன்னார்வத் திட்டங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருவதால் இந்த நேர வங்கி திட்டத்தையும் இங்கு செயல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சுவிஸ் ரெட் கிராஸின் உள்ளூர் அமைப்பு 2008 ஆம் ஆண்டிலிருந்து இதுபோல ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் உதவியை பரிமாறிக்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கனவே இங்கு நடைமுறையில் இருக்கும் இதேபோன்ற மற்ற சேவைகளுடன் போட்டி போடுவது இந்த நேர வங்கியின் நோக்கம் அல்ல. வயதானவர்களின் தினசரித் தேவைகளை இந்த நேர வங்கி ஆர்வலர்கள் செய்து கொடுக்கிறார்கள். இந்த சேவையின் முக்கிய நோக்கம் வயதானவர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் சுதந்தரத்தை இழக்காமல் நீண்ட நாட்கள் வாழ உதவுவதுதான்.

மருத்துவமனையில் அதிகப் பொருட்செலவு என்பதுடன் வயதானவர்களுக்கு மனத் திருப்தியும் அளிப்பதில்லை. இந்த வகையில் நேர வங்கி முற்றிலும் மாறுபடுகிறது. முதியவர்களின் தனிமையும் இந்த நேர வங்கி ஆர்வலர்களின் மூலம் குறைகிறது. இதன் மூலம் மக்கள் ஒன்று சேரவும், அவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் முடிகிறது.

நேர வங்கி என்பதுவும் ஒருவித ஓய்வுதியம் போலத்தான். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் சுவிஸ் ஃபெடரல் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம். இளம் வயதுக்காரர்கள் ஒருமணிநேரம் இரண்டு மணிநேரம் என்று முதியவர்களைப் பார்த்துக் கொள்வதன் மூலம் நேரத்தை சேமித்து வைக்கிறார்கள். தங்களது வயதான காலத்தில் தங்களைப் பார்த்துக்கொள்ள ஆர்வலர்களை இந்த நேரங்களில் உதவிக்கு அழைக்கிறார்கள். ஆர்வலர்கள் ஆரோக்கியமாகவும், நன்கு பேசத் தெரிந்தவர்களாகவும், வயதானவர்களிடம் அன்பு செலுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு வருடம் வேலை செய்தவுடன் நேர வங்கி அவர்களுக்கு நேர வங்கி அட்டையை வழங்குகிறது. அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது நேர வங்கி இவர்களது சேவையை பரிசீலனை செய்துவிட்டு இன்னொரு ஆர்வலரை இவர்களது உதவிக்கு அனுப்பி வைக்கிறது.

மொத்த ஜனத்தொகை 72,522 உள்ள செயின்ட் காலனில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 12,000 பேர்கள் இருக்கிறார்கள். இவர்களது பங்களிப்பு இந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். 300 தன்னார்வலர்கள் ஒரு வாரத்திற்கு 2-3 மணிநேரம் என்று 42 வாரங்களுக்கு சேவை செய்வதாக இருந்தால் மொத்தம் 25000 மணிநேரங்கள் சேமித்து வைக்கப்படும். இந்த இலக்கை அடைந்துவிட்டாலே இந்த திட்டம் வெற்றி என்று சொல்லலாம். ஒரு தன்னார்வலர் அதிகபட்சமாக 750 மணி நேரங்களை சேமித்து வைக்கலாம்.

இந்த திட்டம் சுவிஸ் அரசின் ஓய்வுதிய செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், வேறு சில சமூகப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறது. சமூகத்தில் கிடைக்கும் வளங்களை பயன்படுத்துவதுடன் கூட்டுக் குடும்பம் போன்ற பலவீனமடைந்துள்ள சமூகக் கட்டுமானங்களையும் புனரமைக்க இந்த திட்டம் உதவும் என்று சுவிஸ் அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்த நாட்டின் குடிமக்கள் இந்த திட்டத்தை வரவேற்பதுடன், ஆதரவும் கொடுக்கிறார்கள். பல இளம் வயதினரும் இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அரசும் இதை சட்டபூர்வமாக அமலாக்க இருக்கிறது.

இது ஒரு தன்னார்வத் தொண்டு என்றாலும் செயின்ட் காலன் அதிகாரிகள் இதற்கென்று 150,000 சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கி இருக்கிறார்கள். உதவி தேவைப்படுபவர்களை ஆர்வலர்கள் அணுகுவதற்கு ஏதுவாக ஒரு இணையதளமும், ஆர்வலர்களுக்கு பயிற்சி கொடுக்கவும், மற்ற நிர்வாகச் செலவுகளுக்காவும் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த திட்டம் வெற்றி பெறவில்லை என்றால் ஆர்வலர்களின் சேமிப்பு நேரத்தை ஈடுகட்டுவதற்கும் இந்தப் பணம் உதவும்.

பணிஓய்வு பெற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. மாறாக இந்த சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பிச் செய்ய விரும்புகிறார்கள். பணத்தேவை இவர்களுக்கு இல்லாதபோதும், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிகிறது. மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நேர வங்கி இந்த எல்லா விஷயங்களையும் பூர்த்தி செய்யும்.

இந்த நேர வங்கி பற்றி Andric Ng என்பவர் mothership.sg என்னும் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சிங்கப்பூரும் இதனை பின்பற்றலாம் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். நம்மூரில் இந்த சேவை அதிகமான கவனத்தைக் கவரும் என்று தோன்றுகிறது. இப்போது நாங்கள் குடியிருக்கும் Gated Community-யில் வாழ்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் 65+. பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கும் சந்ததியைச் சேர்ந்தவர்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெளிநாடு போய் பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டு வருபவர்கள். இதுகூட எத்தனை வருடங்கள் நடக்கும்? எல்லோருடைய மனதிலும் இன்னும் வயதாகி முடியாமல் போய்விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் நம்மை என்ற பயம் உண்டு. உடம்பு சரியில்லை என்றால் பிள்ளை, பெண்களுக்குப் பாரமாகி விடுவோமோ என்ற பயமும் உண்டு. உடம்பு முடியவில்லை என்பதையே ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல கூனிக் குறுகிச் சொல்லிக் கொள்ளுவார்கள். இதே பிரச்னையை சீனாவில் உள்ள பெற்றோர்களும் எதிர்கொள்ளுவதாக ஆண்ட்ரிக் எழுதியிருக்கிறார்.

இந்த நேர வங்கி நம்மூரில் பயன்படுமா?

நன்றி:
https://www.swissinfo.ch/eng/swiss-city-set-to-launch-elderly-care–bank-/32209234
mothership.sg

செல்வ களஞ்சியமே – 11  

$
0
0

 

‘நாம் கருவிலிருக்கும் போதே நமக்கான உணவை இறைவன் நம் தாயின் முலையில் வைக்கிறான் என்றால் அவன் கருணைக்கு எல்லை எது’ என்று சொல்வதுண்டு.

இன்றைக்கு நாம் மார்பகங்களை எப்படி பாதுகாப்பது, எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது என்பது பற்றிப் பேசப் போகிறோம். இதையெல்லாம் பற்றி இங்கு பேச வேண்டுமா என்று உங்களுக்குத் தோன்றலாம். இதைப்பற்றி இங்குதான் பேசவேண்டும்.

என் உறவினர் ஒருவர் துணைவியுடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம், ‘பாத்ரூம் போகணுமானால் போய்விட்டு வா’ என்று எல்லோர் எதிரிலும் கூற, எங்களுக்கு ஒரு மாதிரி ஆனது. பிறகு அந்த மாமி கூறினார்: ‘வெளியில் வந்து எப்படி இதைக் கூறுவது (சிறுநீர் கழிக்க வேண்டுமென்று) என்று எத்தனை நேரமானாலும் அடக்கி வைத்துக் கொள்வேன். போனவாரம் ஒரே வலி ‘அந்த’ இடத்தில். மருத்துவரிடம் போன போது ‘நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்ளுவீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.

என்ன ஆகும் இப்படிச் செய்வதால்?

சிறுநீர் என்பது நம் உடலில் உள்ள வேண்டாத கழிவுப் பொருள். வீட்டில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது போல இதையும் வெளியேற்ற வேண்டும். நமது சிறுநீரகங்களில் இருக்கும் சிறுநீர்ப்பையால் அதன் கொள்ளளவுக்கு  மேல் சிறுநீரை நீண்ட நேரம் தேக்கி வைத்துக் கொள்ள முடியாது. அடிக்கடி இப்படிச் செய்வதால் நாளடைவில் அவை பலவீனமடையும்.

பலவீனமான சிறுநீர்ப்பை அதிக நேரம் சிறுநீரை தாங்கிக் கொள்ள முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரை வெளியேற்ற ஆரம்பிக்கும். நாளடைவில் இது சிறுநீர் கசிவு (Female Incontinence) நோயாக மாறும் அபாயம் உள்ளது. இந்த நோய் பெண்களிடையே அதிகம் காணப்படுவதன் காரணங்களில் இப்படி சிறுநீரை வெளியேற்றாமல் அடக்க முற்படுவதும் ஒன்று. இது தேவையா?

சிறுநீர் போகாமல் கழிவுப் பொருட்கள் உடலில் உள்ளேயே தங்குவதால் UTI’ எனப்படும் நோய்த்தொற்று உண்டாகும். இந்த நோய் தொற்று வந்தால் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் கடுமையான வலி, எரிச்சல், சில சமயம் இரத்தம் கலந்த சிறுநீர் வெளிவருவது என்று பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும். இது தேவையா?

சிறுநீரைக் கழிக்காமல் இருப்பதால் நீங்கள் திரவப் பொருள் உட்கொள்ளுவதை நீண்ட நேரம் ஒத்திப் போடுகிறீர்கள். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துப் பொருள் கிடைக்காமல் போகிறது.

இவ்வளவு பின்விளைவுகள் இருப்பதாலேயே என் உறவினர் தன் மனைவியை அவ்வாறு வெளிப்படையாக கேட்டார் என்று தெரிந்தது.

பெண்களின் உடம்பைப் பற்றி பேசுவது தவறல்ல; ஒவ்வொரு பெண்ணும் தன் உடம்பைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளுவது மிகவும் அவசியம்.

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான விஷயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது. அதற்கு உதவும் மார்பகங்களைப் பற்றி எப்படிப் பேசாமல் இருப்பது?

மார்பகங்கள் வெறும் ‘கிளுகிளுப்பு’ மட்டுமல்ல; அதையும் விட மிகவும் முக்கியமான உறுப்பு. குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் வேலையைத் தவிர நீங்கள் பெண் என்று உலகுக்கு பறை சாற்றும் உறுப்பு அதுதான். தாய்ப் பாலுடன் குழந்தைக்கு ஆரோக்கியத்தையும் சேர்த்துக் கொடுக்கிறீர்கள் என்பதை பெண்கள் மறக்கக் கூடாது. ஆரோக்கியமான உடலும்  கூடவே நம் உடலைப்  பற்றி சரியான முறையில்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆரோக்கியமான மனமும்  பெண்களுக்கு அவசியம் தேவை.

கருவுற்ற  முதல் மூன்று மாதங்களில் மார்பகங்கள் மிருதுவாக ஆகும். சிலருக்கு ப்ரா அணியும்போது சற்று வலி ஏற்படலாம். இரண்டு அறிகுறிகளுமே வழக்கமாகத் தோன்றுபவைதான்.

இரண்டாவது மூன்று மாதங்களில் முலைக் காம்புகள் கருத்து மார்பகங்கள் பெரிதாகும். இதனால் கருவுற்றிருக்கும் பெண்கள் சற்றுப் பெரிய அளவில் ப்ரா அணியவேண்டும். மிகவும் இறுக்கமான செயற்கை இழைகளால் ஆன ப்ரா அணியக்கூடாது. அணிந்தால் என்ன ஆகும்? பால் வரும் துவாரங்கள் அடைபட்டு தாய்ப்பால் சுரப்பது தடைப்படும். பருத்தியால் ஆன ப்ரா உத்தமம். தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பதற்கென்றே வசதியாக ப்ராக்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்தலாம். எதை பயன்படுத்தினாலும் சுகாதாரம் முக்கியம்.

குழந்தை பிறந்து பாலூட்ட ஆரம்பித்தவுடன், தினமும் குளிக்கும்போது வெறும் நீரால் மார்பகங்களை அலம்பவும். சோப் வேண்டாம். சோப் பயன்படுத்துவதால் மார்பகங்களைச் சுற்றியுள்ள தோல் வறண்டு போகும். இதனால் முலைக் காம்புகளில் சின்னச்சின்ன வெடிப்புகள்  ஏற்படலாம். வெடிப்புகளின் மேல் பேபி லோஷன் தடவலாம். குழந்தைக்குப் பால் புகட்டுவதற்கு முன் நன்றாக அலம்பிவிட வேண்டும். உங்கள் கையையும் நன்றாக அலம்பிக் கொள்வதால் நோய்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை குழந்தை பால் அருந்திய பின்னும்  ஒரு சுத்தமான துணியினால் மார்பகங்களை நன்றாகத் துடைத்துவிட்டு பிறகு ப்ரா ஊக்குகளை போடுங்கள். ஈரத்தில் நோய்தொற்றுகள் வளருகின்றன.

குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்க ஆரம்பித்தாலும், இரண்டு மூன்று நாட்களில், அதாவது குழந்தை பால் குடிக்க ஆரம்பித்து சில நாட்களுக்குப் பிறகுதான் நல்ல சுரப்பு இருக்கும்..

குழந்தை பிறந்த முதல் ஓரிரு நாட்கள் தாய்ப்பால் லேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இதற்கு கொலஸ்ட்ரம் என்று பெயர். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணவும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கவும் இது கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும்.

முதல் இரண்டு மூன்று நாட்கள் குழந்தையும் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும்; அதிகப் பசியும் ஏற்படாது. இந்த இரண்டு மூன்று நாட்கள் நீங்களும், குழந்தையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளவே. முதல் சில நாட்கள் குழந்தைக்கு மார்பகத்தைப் பிடித்துக் கொள்ளத் தெரியாது. உங்களுக்கும் எப்படி பாலூட்டுவது என்று தெரியாது. குழந்தையின் தலை உங்கள் இடது கை / வலதுகை முழங்கையில் பதிய இருக்காட்டும். இன்னொரு கையால் அதன் இரண்டு கன்னங்களையும் சேர்த்து பிடியுங்கள். குழந்தையின் வாய் திறக்கும். உங்கள் மார்பகத்தின் அருகில் அதன் திறந்த வாயைக் கொண்டு செல்லுங்கள்.  குழந்தைக்கு தன் உள்ளுணர்வினால்  ‘ஓ! சரவண பவன் இங்கிருக்கிறது’ என்று தெரிந்துவிடும். பொறுமைதான் ரொம்பவும் தேவை.

பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் உட்கார்ந்த நிலையிலேயே ‘எடுத்து’ விடவேண்டும். நீங்கள் உட்காரும் நிலை சரியாக இருக்க வேண்டும். நன்றாக சாய்ந்து கொண்டு முதுகிற்கு கெட்டியான தலையணை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை சரியான நிலையில் கையில் ஏந்திக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் மிகவும் முக்கியம். மூன்றாவது முக்கிய விஷயம் மன அமைதி.

இது உங்களுக்கும் குழந்தைக்குமான பிரத்யேகமான நேரம். அப்போது புத்தகம் படிப்பது, தொலைக்காட்சியில் அழுகைத் தொடர்கள் பார்ப்பது வேண்டாம். ஆற அமர, அமைதியாக உளமார, மனமார குழந்தையுடன் பேசிக் கொண்டே பாலூட்டுங்கள். பாலுடன் கூட பாசிடிவ் எண்ணங்களையும் ஊட்டுங்கள். பாடத் தெரியுமா, குழந்தைக்கும் உங்களுக்குமாகப் பாடுங்கள்.

இதனால் உங்களுக்கும் பால் நன்றாக சுரக்கும். குழந்தையும் நன்றாகப் பால் குடிக்கும். ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை குழந்தைக்கு உருவாக்கலாம்.

சில குழந்தைகள் சிறிது குடித்துவிட்டு அப்படியே தூங்கிவிடும். குழந்தையின் காதுகளை தடவினால் விழித்துக் கொள்ளும். இல்லையானால் பிஞ்சுக் கால்களில் ‘குறுகுறு’ பண்ணலாம்.

பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் கோலிக்குண்டு அளவிலும், இரண்டாம் நாள் பிங்க்பாங் பந்து அளவிலும், மூன்றாம் நாள் ஒரு பெரிய வளர்ந்த முட்டை அளவிலுமாக சிறிது சிறிதாக வளர தொடங்கும்.

குழந்தை தனக்கு வேண்டிய பாலை முதல் 5  நிமிடங்களில் குடித்துவிடும். நாள் ஆக ஆக குழந்தைக்கு வயிறு வளர்ந்து அதன் பசியும் கணிசமான அளவு அதிகரித்தவுடன் பாலூட்டும் நேரமும் அதிகமாகும்.

இரண்டு பக்கமும் பால் கொடுத்து பழக்குங்கள். குழந்தை நன்றாகப் பால் குடித்தவுடன் மார்பகங்கள் லேசாக ஆகும். குழந்தை குடிக்கக் குடிக்க பால் நன்றாக ஊற ஆரம்பிக்கும்.

பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் வேதனை கொடுப்பது ‘பால் கட்டிக்’ கொள்வது தான். குழந்தைக்கு சரியாக குடிக்கத் தெரியாததாலும், நீண்ட நேரம் எடுத்து விடாமல் போனாலும் இதைப்போல பால் கட்டிக் கொண்டுவிடும்.

கையாலேயே பாலை பிய்ச்சி வெளியேற்றிவிடுங்கள். இல்லையென்றால் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம். அல்லது சுடுநீரால் மார்பகத்தை கழுவலாம். இதனாலும் பால் வெளியேறும்.

இன்னொரு முறை: தோசைக் கல்லை அடுப்பின் மேல் இடுங்கள். சூடானவுடன், ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை அதன்மேல் வைத்து, பொறுக்கும் சூட்டில் மார்பகத்தின் மேல் வைக்கலாம். தானாகவே பால் வெளியேறும். இல்லையானால் நிதானமாக ஆனால் உறுதியாக மார்பகத்தை முலைக்காம்புப் பக்கம் அழுத்தித் தடவுங்கள். பால் வெளியேறும்.

பொதுவாக இந்த மாதிரி ‘கட்டி’ விட்ட பாலை குழந்தைக்குக் கொடுப்பது நல்லதல்ல. அதனால் ஒரு சுத்தமான துணியை வைத்துக் கொண்டு வெளியேறும் பாலை துடைத்து விடுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் எல்லாப் பெண்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

பாலூட்டும் நேரத்தை  குழந்தையுடன் ரசித்து அனுபவித்துக் கொண்டிருங்கள். அடுத்தவாரம் பார்க்கலாம்!

 

paguthi 10

paguthi 12

 

 

 

 

Viewing all 393 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>